இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் சண்டையால் காசா அமைதியிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் முதலில் சில மணி நேரங்களும், அதன்பின்னர் சில நாட்களுக்கும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தது.
இதனால், எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தது. எனவே, இந்த போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் எகிப்து கேட்டுக்கொண்டது. அதன்படி இரு தரப்பும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து காசாவில் அமைதி திரும்பியுள்ளது. காசா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. இதையடுத்து, பீரங்கி வாகனங்களுடன் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் தங்கள் இருப்பிடங்களை நோக்கி புறப்பட்டனர்.
7 வாரம் ஹமாஸ் இயக்கத்துடன் நடந்த சண்டை முடிவுக்கு வந்தாலும், மற்றொரு பிரச்சினையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது இஸ்ரேல். அதாவது, இஸ்ரேல்-சிரியா இடையே உள்ள கோலன் ஹைட்சின் எல்லைப் பகுதியான குனித்ராவை அரசுப் படையினரிடம் இருந்து அல்கொய்தா அமைப்பின் சிரியா பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சண்டையில் சிரியா அரசுப் படையைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
(MM)