– அப்துல்லாஹ் –
புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா வீதியில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான அப்துல் நாஸர் ஆசிரியரின் தாயான சின்னத்தம்பி மரியங்கண்டு (வயது 70) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புகையிரதத்தில் இந்த வயோதிபத் தாயும் குடும்பத்துத்துடன் பயணம் செய்து ஏறாவூர் புகையிரத நிலையித்தில் வந்திறங்கி வீடுநோக்கிச் செல்ல புகையிரத நிலையத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர். அவ்வேளையில் குறித்த முச்சக்கர வண்டியும் இன்னொரு முச்சக்கர வண்டியும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் பயணித்துள்ளன. அவ்வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே நடப்பட்டிருந்த அழகுத் தாவரச் சட்டியில் மோதி தடம்புரண்டு இருண்டு ஆட்டோ வண்டிகளும் நொருங்கியுள்ளன.
அந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உடனடியாக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆட்டோ வண்டிச் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.