ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இடத்தில் 4 ஏக்கரில் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு இன்று மதியம் முதல் அப்துல் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் ராமேஸ்வரம் வர உள்ளனர் என்பதால், மத்திய உளவுத்துறையினர் மற்றும் மாநில போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில், தங்கச்சிமடத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பேக்கரும்பு கிராமத்தில், தங்கச்சிமடம் ஊராட்சிக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம், அப்துல் கலாமின் உடலை அடக்கம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலாமின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.