சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தலைமன்னார் மக்களின் வீடமைப்பு திட்டத்தை நடை முறைபடுத்த முற்பட்ட போது அதனை பாதுகாப்பு தரப்பாரிடம் பிழையாக தகவல் கொடுத்தவர்கள் இங்கு இருப்பதாகவும் கூறினார்.
தலைமன்னாருக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் வேட்பாளர் எஹியான் ஆகியோருக்கு இப்பிரதேச மக்கள் மாபெரும் வரவேற்பினை அளித்தனர்.
அதனை தொடர்ந்து தலைமன்னாரில் கட்சியின் அலுவலகத்தினை திறந்து வைத்து இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று இந்த மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான அடித்தளத்தினை நாம் இட்டுள்ளோம்.நீங்கள் அச்சமற்ற சூழ் நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள்.இந்த கிராமம் எதிர் காலத்தில் பாரிய அபிவிருத்தியினை கானும்,நேற்று மன்னாருக்கு வந்த பிரதமர் எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் வீடில்லா அனைத்து மக்களுக்கும் நாம் அதனை நிர்மாணித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக, எனவே இவ்வாறான அபிவிருத்திகள் எம்மை வந்து சேர வேண்டும் என்றால் சுய நலமற்ற சமூகத்தின் மீது பற்றுள்ளவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்