Breaking
Mon. Dec 23rd, 2024
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்ற தோரனையில் இனவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.
இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.
அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.
முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.
எந்த விதத்தில் பார்த்தாலும் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்தின் பெயரால் கலங்கப்படுத்த முயல்வது கண்டிக்கத் தக்க செயல்பாடாகும்.
புனித அல்-குர்ஆன் மற்றும் உலக மக்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்களுடைய வார்த்தை ஆகியவற்றால் கவரப்பட்டு இஸ்லாத்தின் பால் இணைந்து கொள்ளும் பல லட்சக் கணக்கான உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைப்பதற்கும், இஸ்லாத்தின் செய்திகளை படிக்க விரும்பும் மக்களை அதை விட்டும் தடுப்பதற்கும் உரிய உத்தியாகவே இஸ்லாத்தின் மீது கலங்கம் சுமத்தும் காரியம் உலகலாவிய சதியாகவே இடம் பெற்று வருகின்றது.
ஜிஹாத் என்பது குழுக்கள் செய்வது அல்ல.
இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஜிஹாத் பற்றிய கட்டளையினை தவறாக புரிந்து கொண்ட சிலர் தங்களுக்கு என்று ஆயுதக் குழுக்களை உருவாக்கி அதனூடாக தாக்குதல் நடத்துவது, கொலை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நாங்கள் ஜிஹாத் செய்கின்றோம். என்பதாகும். ஜிஹாத் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
இஸ்லாத்தைப் பொருத்த வரையில், முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.  தாம் உருவாக்கிய குழுக்களுக்கு இஸ்லாமிய அரசு நாங்கள் தான் என்று அவர்களே பெயர் சூட்டிக் கொண்டதினால் அது இஸ்லாம் அனுமதித்த புனிதப் போராக மாறாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே அல்குர்ஆனும், நபி மொழிகளும் ஜிஹாத் பற்றி கற்றுத் தரும் இலக்கணமாகும்.
கடந்த டிசம்பர் 24-ந் தேதி அன்று அமெரிக்கா கூட்டு படையினருக்கான 16  ரக விமானத்தை இவர் ஓட்டிச் சென்ற போது அதுரக்கா என்ற பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இது இராக்கில் ISIS யின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியாகும்.
இந்த விமானத்திலிருந்து தப்பிய கஸாஸிபாவை சிறை பிடித்த இவர்கள்.  இவரை ஒப்படைக்க வேண்டுமானால் ஏற்கனவே பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஜோர்டான்சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாஜிதாரிஷாவியை அந்நாட்டு அரசாங்கம் துருக்கி எல்லையில் கொண்டு வந்து விட வேண்டும்! இல்லையென்றால் கஸாஸிபாவை கொன்று விடுவோம் என ISIS எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு ஜோர்டான் அரசாங்கம் பணியவில்லை.  அதனால் கஸாஸிபாவை தீயிலிட்டு உயிருடன் துடிக்க துடிக்க கொன்றார்கள்.  கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் அவர் எரிந்து சாகின்ற காட்சி உலகத்தையே உலுக்கிவிட்டது. ஜோர்தானும் கொந்தளித்தது. ஆண்கள். பெண்கள் என்று மக்கள் பெரும் அளவில் கூடி ISIS-யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
எகிப்தில் உள்ள அல்அஸ்கர் பல்கலைக் கழகம் இந்த காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிராக தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.
இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் அஷ்- ஷர்க்குல் அவ்ஸத் என்ற அரபீ தினசரி பத்திரிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
இந்த ISIS ஷைத்தான்கள் பூமியில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.  அதனால் இவர்களுக்கு 5:33 வசனத்தின் படி மரண தண்டனை வழங்க வேண்டும்.
கொல்லப்படுவது. அல்லது சிலுவையில் அறையப்படுவது. அல்லது மாறுகால். மாறுகை வெட்டப்படுவது. அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும். அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. (அல்குர்ஆன் 5.33)
இது முற்றிலும் இஸ்லாமிய நெறிகளுக்கு நேர் எதிர்மறைாயான ஓர்பயங்கரவாத செயலாகும். இவர்கள் மனித பண்புகளை தாண்டி மிருக குணம் படைத்தவர்கள்.
முஸ்லிம் 3261-ல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்ற போர் நெறிகளுக்கு மாற்றமாக நடக்கின்ற அரக்கர்கள் இவர்கள்!
நபி (ஸல்) அவர்கள்  அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு நீங்கள் வேதனை செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இலங்கை அரசு அனைத்துத் தரப்பிலும் கவனமெடுக்க வேண்டும்.
கடந்த 03 தசாப்த காலங்களாக இலங்கையில் இருந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சமாதானம் துளிர் விட்டு, அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் நிலை உருவாக்கப்பட்டது.
இது போன்ற நேரத்தில் இஸ்லாத்தையும், இஸ்லாம் கூறும் ஜிஹாத் – புனிதப் போர் பற்றிய சட்ட திட்டங்களையும் தவறாகப் புரிந்தவர்கள் சிலர் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ISIS ல் இணைந்து கொண்டதாக அன்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் யாராக இருந்தாலும் இவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இவர்களின் தீவிரவாத செயல்பாடு, மற்றும் இதற்கு துணை போனவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.
அத்துடன், தீவிரவாதம் என்பது எந்த உருவத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் அதனை தடுப்பது என்பது அரசின் கடமை என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு, இன்றும் ஈடுபட்டு வருகின்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதே தீவிரவாதத்தை முழுமையாக இல்லாமலாக்கியதாக அமையும் என்பதையும் கவனத்தில் கொண்டு அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இலங்கை அரசை வேண்டிக் கொள்கின்றது.

Related Post