அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக இப்பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
நேற்று மாலை வீசிய மினி சூறாவளி சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது. பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்கிளிலுள்ள வீடுகளின் கூரைகள் மின் கம்பங்கள் என்பன சேதமானதுடன் மின்கம்பிகள் சில அறுந்து வீழ்ந்து சில மணிநேரம் இப்பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதான வீதியருகே இருந்த பாரிய மரம் வீதியின் குறுக்காக முறிந்து வீழ்ந்ததனால் கல்முனை-அக்கரைப்பற்று பிரதான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது. வீதியின் குறுக்கே சரிந்து கிடந்த மரக்கிளைகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அகற்றியதன் பின்னர் போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றன.
விவசாய அறுவடை காலமாககையால் அறுவடை செய்யப்பட்டு உலர்த்ப்பட்ட பெருந் தொகையான நெல் மழை நீரில் அகப்பட்டதனால் பாரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.