– கிருஷ்ணி இஃபாம் –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய செவ்வி:
கேள்வி: எதிர்வரும் செப் 16ந் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப்படுத்தும் வகையில் “பரிசர யுக்திகேந்ரய” எனும் சுற்றுச் சூழல் அமைப்பின் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று செய்து வருகின்ற என் மீது பிரதானமாக குற்றம் சுமத்துவதோடு இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் சமகால பிரச்சினைகளுக்கு எதிராக நான் தொடர்ந்தும் குரலெழுப்பி வருவதை இவ்வினவாத அமைப்புகள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றன. .
அல்குர்ஆனுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக் கூறியமைக்கு பொது பல சேனாவுக்கு சட்ட நடவடிக்கை எடுத்தமை, எனது அமைச்சினுள் புகுந்து அடாவடித்தனம் புரிந்தமை மற்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த வடரேக விஜித தேரரின் ஊடக மாநாட்டை அத்துமீறி தடுத்து அடாவடித்தனம் புரிந்தமை போன்ற வன்செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, இவ்வினவாதிகளை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தியதில் எனது பங்களிப்பை அறிந்து அடுத்து வரும் பாராளுமன்றத்திற்கு நான் தெரிவாவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவென நான் பகிரங்கமாக அறைகூவுகின்றேன்.
கேள்வி: தேர்தல் நெருங்கும் வேளை சந்தர்ப்பம் பார்த்து எதிர்காலத்தில் உங்களை முழுமையாக அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரம் கட்டுவதற்கான சதித்திட்டம் உருவாகியுள்ளது என்று கடந்த புதன் கிழமை (5) ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள் இது குறித்து உங்களது கருத்து?
பதில: அடுத்த மாதம் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு எனக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நான் நல்ல சந்தர்ப்பமாகவே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த வழக்கின் போது சட்டரீதியான சகல ஆவணங்களையும் சமரப்;பிக்க விருக்கின்றேன். அத்துடன் இந்த வழக்கின் மூலம் எனக்கும் எனது மக்களுக்கும் நீதி கிட்டும் என்றதொரு நம்பிக்கையும் இருக்கின்றது. தேர்தலொன்று நடைபெறவிருக்கின்ற இக்காலகட்டத்தில் இது போன்றதொரு வழக்கு எனக்கெதிராக தாக்கல் செய்வதன் மூலம் எனது அரசியல் பயணத்தை அழித்தொழிப்பதில் இனவாதச் சக்திகள் எந்தளவுக்கு அக்கறை காட்டி வருகின்றது என்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.
என்றாலும் இதனை நான் எனக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன். இந்த இனவாதச் சக்திகள் என்னை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக இந்த தேர்தல் நடைபெறும் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதன் மூலம் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவும் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். எனக்கெதிரான சேறு பூசும் நடவடிக் கைகளை கைவிடுவதற்கு நான்கு கோடி ரூபா என்னிடம் கப்பம் கோரப்பட்டிருப்பட்டுள்ளது;. இது தொடர்பான ஒளிநாடா என்னிடம் இருக்கின்றது. அதனை தேர்தல் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் ஒப்படைத்திருக்கின்றேன். ஆனால் நான் எதற்கு அஞ்சமாட்டேன். மன்னார் மாவட்டத்தில் கடந்த காலத்தில் அரசியலில் ஈடுபட்டு தோல்வி கண்ட குவாதீர்கான் எனும் நபர் நேரடியாக இனவாத குழுவினரின் பின்னணியில் தொடர்புபட்டிருக்கின்றார்.; இருவர் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் வேட்பாளர். எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியலிலிருந்து என்னை வீழ்த்துவதற்கே எத்தனிக்கின்றார். இவரது இந்த வித்தை தொடர்பான சகல ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றது. வெகுவிரைவில் இந்தக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தினை தக்க ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். அத்துடன் என் மீதான இந்த சேறுபூசும் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு தமிழ் இலத்திரனியல் ஊடகத்தைச் சேர்ந்த பிரதானியும் செயற்பட்டு வருகின்றார்.
கேள்வி: குறிப்பிட்ட அரசியல் வாதிகள் சிலர் ஏன் உங்களையும் உங்களது கட்சியினையும் அடிக்கடி விமர்சித்து குறி வைத்து ஓரம் கட்டி சேறு பூச முயல்கின்றனர்?
பதில்: உண்மையில் அரசியல் விமர்சனங்கள் ஒரு அரசியல் வாதியை உற்சாகப்படுத்தி சமூகம் மத்தியில் பிரபல்யமாக்குகின்றது. அந்த உண்மை அவர்களுக்கு தெரியாது. மக்கள் மத்தியில் சென்றடையும் விமர்சனங்கள் தீர்மானிப்பது அவர்களே. எது உண்மை எது பொய் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். எமது சமூகத்தினரை யாரும் வெகுவில் ஏமாற்ற முடியாது.அவர்களின் தீர்மானங்கள் எப்போதும் நியாயமாகவே இருக்கும் அதன் விளைவுகளை ஆகஸ்ட் 18 ம் திகதி வெளியாகும் போது பார்க்கலாம். உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறைவனின் துணையால் குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியை பொறுக்காதவர்கள் என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்டி விடலாம் என பகற்கனவு காண்கின்றனர். பதவியை தருபவனும் இறைவன், அதை பறிப்பவனும் இறைவன்.யார் என்னதான் தலைகீழாக நின்றாலும் இறைவனின் அசைவின்றி எதுவும் நடைபெறாது.
கேள்வி: உங்களது அரசியல் பயணத்தின் கனவு என்ன?
பதில்: அகதி முகாமிலிருந்து ஆரம்பித்த எனது அரசியல் பயணம் இன்று பெரும் விழுதுகளுடன் விருட்சமாக ஆலமரம் போல் ஒரு பலமான இயக்கமாக வேரூன்றி இருக்கின்றது. சமுகத்தின் விடுதலைக்காகவும் தமிழர்களினது முஸ்லிம்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும் வடமாகாணம் உட்பட நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாகவும் இன மத வேற்றுமையின்றி சம உரிமையுடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம். அரசின் நல்லாட்சிக்கான பங்களிப்பிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள நீண்ட பயணத்திற்கு முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு உள்ளது.
நல்லாட்சிக்கான எமது பங்களிப்பிற்கு இது ஒரு திருப்பு முனை! இன்று சிலர் வாக்கு வேட்டைக்காக என்னைப் பற்றி விசமத்தமான பரப்புரைகளையும் அபாண்டமான பழிகளையும் சுமத்தி வருகின்றனர். எனது வாக்கு வங்கிகளை சரித்து விட வேண்டும் என மகிந்தவின் கைக்கூலிகளும் எமது கட்சி வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலரும் கங்கணம் கட்சி நிற்கின்றனர். பொதுத் தேர்தலில் இவர்களுக்கு எமது மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் நான் தேர்தல் காலத்தில் மட்டும் இந்த பிரதேசத்திற்கு வந்து முச்;சந்தியிலும் கடைத் தெருக்களிலும் மேடை அமைத்து கொக்கரித்து விட்டு செல்பவனும் அல்ல. மக்களின் உணர்வுகளை தூண்டி வீர வசனங்களை சொல்லி வாக்கு கேட்பவனும் அல்ல. வன்னி மக்களோடு இரண்டரை கலந்துவன் நான். வாக்கு பிச்சசைக்காக தேர்தல் காலங்களில் மட்டும் இந்த பிரதேசத்திற்கு வந்து சவாரி செய்பவர்களின் மனட்சாட்சிக்கு இது தெரியும்
கேள்வி: ராஜபக்ஸ ஆட்சியில் கேள்வி குறியாக இருந்த முஸ்லிம் சமுகத்தினது எதிர்காலம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும்; ஒளிமயமாகுமா?
பதில்: தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வழங்கும் என்றும் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி எமக்கு பூரண நம்பிக்கைகையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் அடையாளத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என்றும் எம்மத்தியில் ஜனாதிபதி அடிக்கடி கூறிவந்ததார். பொய்களை கூறி வாக்குகளை பெற நாம் முயற்சிக்கவில்லை.
கடந்த இருவருடங்களாக ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாதம் தழைத்தோங்கியிருந்தது. இதற்கு முழுக்காரணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதியே. இவர் பொதுபலசேன அமைப்பின் இனவாதச் செயற்பாட்டை கட்டுப்படுத்தவில்லை. அசமந்தப் போக்குடன் இருந்தார். இதனால் இவருக்கு வீடு செல்வதற்கான சந்தர்ப்பத்தினை எமது சமுகம் வழங்கியது. இவர் நேர்மையாக இருந்திருந்தால் இன்னும் 10 வருடங்கள் இருந்திருக்கலாம்.முஸ்லிம் சமுகத்தின் மீது மகிந்த அரசு மேற்கொண்ட வந்த அடக்குமுறைகளை இனியும் தாங்க முடியாது என்ற காரணித்தினால் பதவியை தூக்கி எறிந்து விட்டு மைத்திரி ரணிலுடன் கைகோர்தேன். நாங்கள் அன்று பயந்து வாழ்ந்தோம். பலமான அமைச்சுப் பதவிகளில் இருந்தபோதும் எங்களது சமூகத்திற்காக பேசினோம், தம்புள்ளையில் இருந்து அழுத்கம வரைக்கும், எங்களது சமூகத்திற்கு நடந்த அநியாயங்களை, பாராளுமன்றத்திலே பேசுனோம். அமைச்சரவைக்குள்ளே பேசினோர், தைரியமாக பேசினோம். இந்த சமூகத்திற்காக பேசினோம். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்ல.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையில் மீள் குடியேற்றப்படாத வடபுல மக்களின் நில உரிமை உட்பட முஸ்லிம்களின் சமய, கலாசார உரிமைகளை தட்டிக்கேட்கும் போது காடாழிப்பு, விலங்கழிப்பு, சட்டவிரோத குடியேற்றம் என அடுக்கடுக்காக என் மீது அபாண்டனமான பொய்களை சிங்கள இனவாத குழுக்கள் சுமத்துகின்றனர்.இதற்கு நான் ஒருபோதும் அஞ்சபோவதில்லை. இன்று திட்டமிடப்பட்ட வகையில் எமது சமூகத்தின் சகல உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் போராடுவேன.; முஸ்லிம் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறக்கூடாது.
கேள்வி அண்மையில் பொது பலசேனாவின் செயலாளர் ஞாசனசார தேரர் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஊடக மாநாடுகளிலும் இலங்கையில் இஸ்லாம் மதம் தலை தூக்கக் கூடாது என்றும் உங்களை ஒரு இனவாதி, மதவாதி என விமர்சித்திருந்திருந்த கருத்துக்கள் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் இது ஒரு அரசியல் தந்திரம். தேர்தல் காலத்தில் தமது கட்சிக்காக வாக்குப்பெட்டிகளை அதிகரித்து அரசியல் பதவிகளுக்காக அரங்கேற்றும் கபட வித்தையாகும்.
கேள்வி: தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், நில உரிமை உட்பட அநீதிகள் மற்றும் சம்பவங்கள் எனும் வரும் போது தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கும் ஒரேயொரு வீரர் நீங்கள் என வன்னிமக்களின் ஏகோபித்த கோசமாகவுள்ளது இது குறித்து நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீகள்?
பதில்: (சிரித்துக்கொண்டு)….. இதற்கான பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன்