Breaking
Thu. Dec 26th, 2024

உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார்.

இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

” உலகக் கோப்பையுடன்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற முடிவு செய்திருந்தேன். ஆனால் தேர்வாளர்கள் கொஞ்ச காலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுகோள் விடுத்தனர். இதனால்தான் மேலும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சம்மதித்தேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது எனது சிறந்த வெளிநாட்டு தொடராக கருதுகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதையும் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

2009 ஆம்  ஆண்டு பாகிஸ்தானில் எங்கள் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதை எனது வாழ்க்கையில் நடந்த மிக மோசமான நிகழ்வாகவே பார்க்கிறேன்.  இதில் காயமடைந்த சமரவீரா சில மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்து சதம் அடித்ததும் மறக்க முடியாத நிகழ்வுதான்.

உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கனவு. இரண்டு முறை இறுதிப்போட்டி வரை வந்தும் நழுவ விட்டது வருத்தமளிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆசையும் நிறைவேறவில்லை. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையும் கானல் நீராகி விட்டது ” என்றார்.

சாதனைகள் பல படைத்தவர், வருத்தத்துடன் கிரிக்கெட்டை நிறைவு செய்வதும் வேதனைதான்!

Related Post