முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுடன் சேர்த்து தன்னையும் கொலைசெய்வதாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகதத் தெரிவித்து முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இதன்போது வெளியிட்டிருந்த தொலைபேசி இலக்கங்களில் எனது காரியாலய இலக்கமும் இருந்ததுடன் எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
நேற்றைய தினம்(2015.08.12) பத்திரிகைகள், இணயதளங்கள் வாயிலாக இந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
நான் ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் எனக்கும் அஸ்வர் ஹாஜியாருக்கும் நல்ல தொடர்பும், புரிந்துணர்வும் இருக்கின்றது.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தி சேகரிப்பாளராகவே நான் பணிபுரிந்தும் வருகின்றமையால் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவுகளுடனும் தொடர்பு உள்ளது.
இந்நிலையில்,
இவ்வாறான ஒரு செய்தி வெளியாகியுள்ளமையினால் பெரிதும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
உள்நாட்டு அழைப்புகளுக்கு நிகராக வெளிநாடுகளிலிருந்தும் எனக்கு அழைப்புகள் நூற்றுக்கணக்கானவை வந்தன.
இதன்போது சிலர் எனக்கு அச்சுறுத்தலான கருத்துகளை முன்வைத்த போதிலும் பலர் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்.
“”முன்னாள் ஜனாதிபதியுடன் சேர்த்து என்னை வெட்டிக் கொலை செய்வதாகப் பயமுறுத்தியதாகவும் அவர்கள் பாதாள உலக கோஷ்டியினராக இருக்கலாமோ” என்ற ஊகத்தையும் இதன்போது அஸ்வர் ஹாஜியார் வெளியிட்டிருந்தார்.
இதுபோன்ற அச்சுறுத்தல் விடுப்பதற்கு எனக்கு இயல்பாகவே வராது என்பதனை அஸ்வர் ஹாஜியாருக்கு நன்கு தெரியும். அவர் சிறந்த மனிதர். அவருக்கு தவறுதலாகவே எனது இலக்கம் வழங்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றேன்.
அது மட்டுமல்லாது, இந்த செய்தியை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள சகோதரர்கள் இருவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதுடன், நெருங்கிப் பழகுபவர்கள். அவர்கள் இது தொடர்பான விளக்கத்தை எனக்கு வழங்கியுள்ளார்கள்.
இதேவேளை, ஊடக தர்மத்தின்படி ஒருவரது இலக்கங்களைப் பிரசுரிக்கும்போது இருமுறை உறுதி செய்திருப்பார்களாயின் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இந்த வகையில் விடிவெள்ளி பத்திரிகை இலக்கங்களைப் பிரசுரிக்காமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது தொடர்பில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், இதுவரை என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும், இது தொடர்பில் நான் கிரேண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இப்படிக்கு
ராயிஸ் ஹஸன்
ஊடகவியலாளர்-