இலங்கையின் அரசியலமைப்பை மதிக்காது அதனை தூக்கியெறிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியில்லையெனத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும், கொழும்பு மாவட்ட ஐ.தே.முன்னணி வேட்பாளருமான ரோஸி சேனா நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த ஆட்சியே சிறப்பான புரிந்துணர்வு ஆட்சியென்றும் தெரிவித்தார்.
கொழும்பில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மக்கள் தான் என்னை அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தனர். எனவே அதற்கு நான் தலைவணங்கினேன். மக்களின் தீர்மானமே உயர்வானது. இதன்போது இலங்கையின் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனை தூக்கியெறிய வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இது பாரதூரமான இலங்கையின் அரசியலமைப்பை அவமதிக்கும் கருத்தாகும். நாம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும், நாட்டின் அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்தே உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்கிறோம்.
இந்த நிலையில் மஹிந்த அரசியலமைப்பை அவமதித்துள்ளார். அது அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியானவரா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது. நாட்டில் இன்று தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த கூறுகின்றார்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராக ஜனாதிபதியே உள்ளார். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார். எனவே, அக்கட்சியில் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கூறுவது ஜனாதிபதியை விமர்சிப்பதாகும்.
கடந்த 20 வருடங்களாக பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த, யுத்தத்தின் போதும் யுத்தம் முடிந்த பின்னரும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளை செய்யவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை. வரிகள் உயர்த்தப்பட்டன. அப்போதெல் லாம் வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்த மஹிந்த இன்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்.
ஆனால் எமது பிரதமர் 60 மாதங்களில் புதிய நாட்டை கட்டியெழுப்பும் தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளார். 10 இலட்சம் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்காக இலங்கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு இப் போதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயாராகவுள்ளனர் எனத் தெரிவித்தார்.