ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்த பொது மக்களின் 1150 கோடி ரூபாவை தெரிந்துகொண்டே மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கெலும் குமார சிங்கவினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய நேற்று அறிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவையும் முன்னாள் மத் திய வங்கி ஆளுநர் கப்ராலையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் பிரதிவாதிகள் இருவரும் தண்டனை சட்டக் கோவையின் 136 (01), 139 (01) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் முதலாவது பிரதிவாதியாக அஜித் நிவாட் கப்ராலும் இரண்டாவது பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த வழக்கின் சாட்சியாளர்களாக அமைச்சர் ரவி கருணாநயக்க, பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜன மகேந்திரன், கலைக்கப்பட்ட பாராளுமன்றின் கோப் குழுவின் செயலாளர் டியூ குணசேகர, நம்பிக்கை நிதிய செயலாளர் சமரதுங்க, மத்திய வங்கி அதிகாரிகளான வீரசிங்க, சில்வா மற்றும் சமர சிறி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக் ஷ, அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு மேலதிகமாக லாப் கேஸ் உரிமையாளர் வேகபிட்டிய, தம்மிக பெரேரா, அஜித் தேவ சுரேந்திர, ஜயந்த தர்மதாஸ, உபாலி தரமதாச ஆகிய வர்த்தக பிரமுகர்களும் இந்த பாரிய மோசடியுடன் தொடர்புடையவர்கள் என பெயரிடப்பட் டுள்ளனர்.