Breaking
Thu. Dec 26th, 2024

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் நடைபெறுமெனத் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பு எம்.பி.சி.எஸ் வீதி, மீராவோடையில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள அனைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஜமாஅத்தின் பொதுத்தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது கருத்துக்களையும் எதிர்காலத்திட்டங்களையும் அரசியல் முன்னெடுப்புக்களையும் நிருவாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

எதிர்காலத்தில் தொகுதி நிர்ணயத்தின் அடிப்படையில் தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். கல்குடாப்பிரதேசம் அரசியல் தலைமைத்துவமற்ற ஒரு சமூகமாகவே மாறக்கூடிய அபாயமுள்ளது.

நான் இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளுடன் முரண்பட்ட குழுக்களுடன் அரசியல் தேவைகளுக்காக தொடர்பினைப் பேணக்கூடிய ஒருவனல்ல. என்னுடைய மறு உலகப் பிரவேசத்திற்காக அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்.

இப்படிப்பட்ட உங்களில் ஒருவனை இம்முறை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் இப்பிரதேசத்தின் அரசியல் தலைமைத்துவத்தினைப் பாதுகாத்திட முடியுமென ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

Related Post