அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உட்பட சிரிய கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது கிளர்ச்சியாளர்களின் தவறுதலான தாக்குதலில் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதியில் அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து இஸ்ரேல் தனது சிரிய எல்லைப்பகுதியை மூடியுள்ளது.
சிரிய அரச படையுடனான கடுமையான மோதலுக்கு பின்னர் சிரிய-இஸ்ரேலுக்கு இடையிலான குனைத்ரா எல்லைக் கடவையை அல் நுஸ்ரா மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு மோதலில் குறைந்தது 20 அரச படையினரும் பல கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் எல்லைக்கடவைக்கு அருகில் கடந்த புதன்கிழமையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போதே இஸ்ரேல் அதிகாரி ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதன்போது ஆறு மோட்டார் குண்டுகள் இஸ்ரேல் எல்லைக்குள் விழுந்துள்ளன. இதற்கு பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல்-சிரியா எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் கிளர்ச்சியாளர் பகுதியில் இருந்து மோட்டார் குண்டுகள் விழுந்ததை உறுதிசெய்துள்ளனர்.
“சிரியா பகுதியில் இருக்கும் எல்லைக் கடவையை சிரிய அரச படையிடம் இருந்து எதிர்த்தரப்பினர் கைப்பற்றி இருப்பது எமக்கு தெரிகிறது. இவர்களில் அல் நுஸ்ரா படையினரும் உள்ளனர்” என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் லுதினன் கொலனல் பீட்டர் லெர்னர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். புதன் காலை தொடக்கம் சிரிய பகுதியில் கடும் மோதல் இடம்பெற்று வந்ததாகவும் அங்கிருந்து தீப்பிளம்புகள் வெளிக்கிளம்பியவாறு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் குறிப்பிட்டுள்ளனர். “எல்லைப் பிரிவுக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் சிரிய படையினர் எதிர்த்தரப்பு ஆயுததாரிகளுக்கு இடையில் காலை முதல் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. ஐ.நா. நிலை கொண்டிருக்கும் பகுதிக்கு அருகில் பல மோட்டார் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன. (இஸ்ரேல் இராணுவம்) பதில் தாக்குதல்களை நடத்தின. அமைதிகாக்கும் படையினர் சிரிய நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு மோதல் வலுப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்” என்று அமைதி காக்கும் படை சார்பில் பேசவல்ல ஸ்டீபன் டுஜர்ரிக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் கிளர்ச்சியாளர்கள் இதேபோன்று இஸ்ரேலுக்கான எல்லைக் கடவையை கைப்பற்றியபோதும் அதனை அரச படை பின்னர் மீட்டது.
தற்காப்பு நடவடிக்கையாக எல்லைப்பகுதியில் கணிசமான துருப்புகள் நிலைநிறுத்தப் பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட் டுள்ளது.”
குறித்த பகுதியை நோக்கிச் செல்லும் வீதி மற்றும் சூழவுள்ள பகுதியை இராணுவ வலயமாக நாம் உடனடியாக பிரகடனம் செய்துள்ளோம். எந்தவொரு சூழலுக்கும் இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளது” என்றும் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
“நுஸ்ரா முன்னணி உட்பட எதிர்த்தரப்பு படையினர் ஒருசில காலமாக எல்லைப் பகுதியில் செயற்படுகின்றனர். ஆனால் குறிப்பிடும்படி இஸ்ரேலுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. சிரியாவில் தாம் வெற்றிபெற்றபின் இஸ்ரேலை நோக்கி முன்னேறுவதாக இந்த ஆயுததாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சிரியாவில் அவர்களது நிலை தற்போது வலுப்பெற்றிருக்கிறது. எனவே அதற்கு தயாராகி வருகிறோம்” என்று3னர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிரியாவின் இரு இராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
சிரிய எல்லையில் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் உ’hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு சிரியாவிலிருந்து நான்கு ரொக்கெட்டுகள் விழுந்தன. எனினும் அவை அனைத்தும் தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஜ{லையில் சிரிய பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இஸ்ரேல் இளைஞன் கொல்லப்பட்டான்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் சிரியாவின் இராணுவ தலைமையகங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியது.
கடந்த 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் மத்திய கிழக்கு யுத்தத்தின்போது சிரியாவின் 1,200 சதுர கிலோமீற்றர் கோலன் ஹைட்ஸ் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேல் அதனை தனது நிலப் பகுதிக்குள் உள்வாங்கியது. எனினும் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. இன்றும்; இஸ்ரேல்-சிரியா யுத்த சூழல் பகுதியாகவே உள்ளது.
2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது தொடக்கம் கோலன் ஹைட்ஸ் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சிரியாவில் இருந்து இஸ்ரேல் பகுதியில் விழும் பெரும்பாலான மோட்டார், ரொக்கெட் குண்டுகள் தவறுதலாக இடம்பெறும் தாக்குதல்களாகும்.
இந்த தாக்குதல் சம்பவங்களால் எல்லைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடும் ஐ.நா. அமைதிகாக்கும் படையினருக்கு பங்களிப்புச் செய்யும் நாடுகள் தமது வீரர்களை விலக்கிக் கொள்வதால் அமைதிகாக்கும் படையினரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.