Breaking
Thu. Dec 26th, 2024

– ஏ.எச்.எம்.பூமுதீன் –

பொதுத் தேர்தல் முடிவு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்துடன் ரிசாத் பதியுதீனை நாட்டின் தேசியத் தலைவராகவும் இந்த முடிவு மீளவும் பிரகடனப் படுத்தியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 07 மாவட்டங்களில் களமிறங்கியிருந்தது. வன்னி, புத்தளம் ,அநுராதபுரம், குருநாகல் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐதேகவின் யானைச் சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சொந்தச் சின்னமான மயிலிலும் போட்டியிட்டது.

இதற்குள் புத்தளம் ,குருநாகல் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மிகவும் சொற்பளவிலான வாக்குகளால் ஆசனங்களை இழந்தது.

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தோல்வியுற்றோர் பட்டியலில் முதல் இடத்தில் அ.இ.ம.கா வேட்பாளர்களே உள்ளனர்.

முகா வின் கோட்டை என வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் 30 நாட்களுக்குள் களமிறங்கிய அ.இ.ம.கா – அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஒருபோதுமே அறிந்திராத மயில் சின்னத்தில் 33122 எனும் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவியது.

மேலதிகமாக 1600 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்குமாயின் அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தை பெற்று பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கும். எனினும் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது என்பது முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை பெரும் ஆபத்தான சவாலான வாக்கு எண்ணிக்கை ஆகும்.

இந்த வேளையில் வடக்கு கிழக்கிற்கு வெளியே அநுராதபுர மாவட்டத்தில் தெரிவாகும் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை இஷசாக் என்பவர் பெற்றுக் கொள்வதுடன் இதற்கான வியூகத்தை வகுத்து அநுராதபுர மாவட்ட மக்களை கௌரவப் படுத்திய பெருமையை ரிசாத் பதியுதீன் பெற்றுக் கொள்கின்றார்.

30 வருடகால அரசியல் வரலாற்றை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இது காலவரை ராவுத்தர் நெயினா முகம்மட் எனும் மாகாண சபை உறுப்புருமையையே பெற்றுக் கொண்டு வந்தது. அந்த உறுப்புருமையையும் இத்தைக்கு 05 வருடங்களுக்கு முன்னர் இல்லாது ஒழிந்து போனது.

இவ்வாறான நிலைமையில் தான் ரிசாத் பதியுதீனின் அதிரடித் தேர்தல் வியூகத்தின் மூலம் முதற் தடவையாக எடுத்த எடுப்பிலேயே பாராளுமன்ற உறுப்புருமையை அநுராதபுரம் பெற்றுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் ரிசாத் பதியுதீன் தேசியத் தலைவராக நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்களால் மீள் பிரகடனம் செய்யப்படுகின்றார்.

கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பாயிஸ் என்னும் மாகாண பிரதிநித்துவத்தை பெற்றதன் மூலம் தேசியத் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்ட ரிசாத் பதியுதீன் அநுராதபுர பாராளுமன்ற உருப்புருமை மூலம் அவர் மட்டும் தான் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்பதை மீள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆண்டாண்டு காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு பிரதிநிதித்துவம் என்றும் பின்னர் ஒரு பிரதிநித்துவமாகவும் கோலோச்சி வந்த முஸ்லிம் காங்கிரஸ் கடந்த திங்கட் கிழமையுடன் ரிசாத் பதியுதீனிடம் மண்டியிட்டு படுதோல்வியை தழுவிக் கொண்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அ.இ.ம.கா வின் கோட்டை என பொதுத் தேர்தல் முடிவு பிரகடனப் படுத்தியுள்ளது. ஏனெனில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 02 ஆசனங்களை பெறுவதற்கு காள்கோலாக வித்திட்டவர் ரிசாத் பதியுதீன் என்பதும் 02 ஆசனங்களில் முதலாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் அ.இ.ம.கா வேட்பாளரான சின்ன மஹரூப் என்பதுமாகும்.
இதற்கடுத்ததாக வன்னி மாவட்டத்திலிருந்தும் முகா வேரோடு வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

ரிசாதை தோற்கடிக்கும் நயவஞ்சகத் தனமான எண்ணத்துடன் களமிறங்கிய முகாவை அல்லாஹ் பொருந்திக் கொள்ளவேயில்லை. அல்லாஹ் அந்தக் கட்சியை வன்னி மாவட்ட முஸ்லிம்களைக் கொண்டே துரத்தியடித்துவிட்டான்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வன்னி மாவட்டத்தில் இன்னும் மேலதிகமாக 1800 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கும் பட்சத்தில் இரண்டு ஆசனம் என்ற இலக்கை ரிசாத் பதியுதீன் இலகுவாக எட்டிப் பிடித்திருப்பார்.

இந்த நயவவஞ்சகத் தனத்திற்கும் மற்றொரு முஸ்லிம் பிரதிநித்துவத்தை வன்னியில் இல்லாது ஒழித்த பெருமையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் எம்பி ஹூனைஸ் பாறுக்கே பெற்றுக் கொள்கின்றார்.

இவ்வாறான கட்டத்தில் தான் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம. காங்கிரஸ் அதிகபட்ச முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக கடந்த திங்கட் கிழமை முதல் எழுச்சி பெற்றுள்ளது.
30 வருடங்களாக அதிலும் குறிப்பாக 2000 ஆண்டுவரை அதிகபட்ச முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற தலைவராக முகா வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த பிரகடனத்தை 2015 ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி வரை அஸ்ரபிற்கு பின் முகா வின் தலைமைப் பதவியை ஏற்ற ரவூப் ஹக்கீம் மீளவும் தேசியத் தலைவராக உறுதி செய்து கொண்டார்.

ஆனால் கடந்த 18ம் திகதிக்கு பிற்பாடு அதிகட்ச முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்ற பிரகடனம் முஸ்லிம்களால் அழித்தொழிக்கப்பட்டு அதிகபட்ச முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ‘ தேசியத் தலைவர்’ ரவூப் ஹக்கீம் என்ற நாமமும் அழிக்கப்பட்டு அம்பாறை மட்டக்களப்புக்கான கட்சி முகா என்றும் அந்த இரு மாவட்டங்களுக்கான தலைவர் தான் ரவூப் ஹக்கீம் என்றும் அதே முஸ்லிம் சமுகம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட தொகுதி முஸ்pலிம்கள்தான் முகா வின் சொந்தக் காரர்கள் என்பதன் மறுபக்கம் உண்மைப் படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் அ.இ.ம.காவின் தவிசாளரான அமீரலியும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பதே அதற்குரிய காரணமாகும்.

அ.இ.ம.கா நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அடைந்துள்ள இலக்கும் எழுச்சியும் 2020 இல் மேலும் எழுச்சி பெறும் என்பதையே இந்த தேர்தல் முடிவு மூலம் துல்லியமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

அதே போன்று 2020 இல் முஸ்லிம் காங்கிரஸூம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனம் என்ற இலக்குடன் வீழ்ச்சியடைந்துவிடும் என்பதையுமே நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குப்பலம் மறுபக்கம் உண்மைப்படுத்தி உறுதிப்படுத்துகி;ன்றது.

Related Post