Breaking
Sat. Nov 16th, 2024

நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாசு தேவ நாணயக்கார, டலஸ் அலகபெரும, விமல் வீரவன்ச, டிரான் அலஸ் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் சந்தித்துள்ளனர்.

எனினும், சுதந்திர கட்சிக்கு சிங்கள மக்களை காட்டி கொடுக்க முடியும் ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் காட்டிகொடுக்க முடியாதென ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டமையை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தலின் போது தமிழர்களை தீவிரவாதிகள் போன்று பெயரிட்டு இனவெறியோடு தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுடன் அரசாங்கம் அமைப்பதற்காக ஆதரவு எதிர்பார்த்தமை தொடர்பில் இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை தடுப்பதற்கு மஹிந்த தரப்பு புதிய சூழ்ச்சி

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று அவற்றில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மேலும் 4 பேர் உறுப்பினர்கள் உறுதியாக கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் ஒரு குழு விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கிடைப்பதனை தடுப்பதற்காக இக் குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்று கொள்வதற்கு திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

Related Post