நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விபரங்களை வெளியிடுமாறு சகல வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டது.
சொத்து விபரங்களை வெளியிடாத எந்தவொரு வேட்பாளருக்கும் வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.
வேட்பாளர் அட்டை இல்லாத வேட்பாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியாதெனவும், குறைந்த பட்சம் வாக்களிப்பு நிலையத்திற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்திருந்ததோடு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட பல வேட்பாளர்கள் இன்னும் சொத்து விபரங்களை வெளியிடவில்லை.
எனினும் இத் தேர்தலில் 6151 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தபோதிலும் சுமார் 2000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் முழுமையாக சொத்து விபரங்களை வெளியிடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.