மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 வருட சிறைத்தண்டனை வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் சிறை திரும்பியுள்ளதாக அவரது கட்சி திங்கட்கிழமை தெரிவித்தது.
மாலைதீவின் தலைநகரிலுள்ள வீட்டிலிருந்து நஷீட் ஞாயிற்றுக்கிழமை இரவு மாபுஷி தீவிலுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் அவரது மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
தண்டனை மாற்றப்பட்டிருந்த நிலையில் நஷீட் சிறைச்சாலைக்கு திரும்பவும் அனுப்பி வைக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறும் செயல் என அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நஷீட் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.மாலைதீவின் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவரான நஷீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் கடுமையான தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களின் கீழ் 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அவரது தண்டனை வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டது.
ஜனாதிபதி அப்துல்லா யமீனின் ஆட்சியானது நஷீட்டை மௌனமாக்கும் முகமாகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.