ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இரண்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள், சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நால்வரும் கைதுச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குனசேகர தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அந்த பிரிவின் பணிப்பளர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் தற்போது மொத்தமாக 7 பேர் எக்னெலிகொட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பிரகீத் எக்னலிகொட ராஜகிரிய பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அது முதல் காணாமல் போயிருந்த அவர் தொடர்பில் ஹோமாகம பொலிஸாரும் , பின்னர் மிரிஹான பொலிஸாரும் அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை நடத்தினர்.
இந் நிலையிலேயே எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் இராணுவத் தரப்பை சேர்ந்த 7பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
முன்னதாக இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இருவரையும் ஓய்வுபெற்ற சார்ஜன் மேஜர் ரண் பண்டா என்பவரையும் புலனாய்வுப் பிரிவு கைது செய்து விசாரணை செய்தது. இதில் எக்னெலிகொட கடத்தப்பட்டு கிரித்தலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னர் அவர் அங்ஜிருந்து குறித்த முகாம் பொறுப்பாளர்களின் உதவியுடன் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டமையும் தெரியவந்தது.
இந் நிலையில் குறித்த காலப்பகுதியில் கிரித்தலை இராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த லெப்டினன் கேர்னல் குமார ரத்ன, லெப்டினன் கேர்னல் சிரிவர்தன, சார்ஜன் ராஜபக்ஷ மற்றும் கோப்ரல் ஜயலத் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவு எழுத்து மூலம் இராணுவ தலைமையகத்தை கோரியது. அவர்களிடம் வாக்கு மூலம் பெற வேண்டிய தேவை இருப்பதால் அவர்களை நேற்று விசாரணைக்கு அனுப்புமாறு அதில் கோரப்பட்டிருந்தது.
லெப்டினன் கேர்னல் குமார ரத்ன, லெப்டினன் கேர்னல் சிரிவர்தன, சார்ஜன் ராஜபக்ஷ மற்றும் கோப்ரல் ஜயலத் நேற்று விசாரணைக்கு வருகை தந்ததுடன் அவர்களிடம் விஷேட விசாரணைகள் இடம்பெற்றன. பகல் 12 மணிக்கு பின்னர் ஆரம்பமான இந்த விசாரணைகள் மாலை 5.00 மணி வரை நீடித்தன. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பின்னர் அந் நால்வரும் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நால்வரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றது.vk