தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும்.
அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் அவசியமானது என கோட்டே நாகவிகாரையின் விகராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
வென்றெடுத்த ஜனநாயகத்தை குழப்பியடிக்க அதிகார மோகம் கொண்ட ஒரு அணி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலின் பின்னரும் பிரதான கட்சிகள் உறுதியான ஆட்சியமைப்பதில் இழுபறி நிலைமை ஏற்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றமானது நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த நாட்டில் இத்தனை காலமும் தனித்து ஆட்சி அமைத்த பிரதான இரு கட்சிகளும் இந்தத் தேர்தலுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் எனும் ஆட்சியின் கீழ் ஒன்றிணைந்தது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய முக்கிய கட்சிகளும் தேசிய அரசாங்கத்தில் கைகோர்த்து நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தலின் மூலமும் மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பிரதான இரு கட்சிகளும் ஒரு அணியில் கைகோர்த்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எதிர்பார்ப்பும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதேயாகும்.
அதேபோல் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் தேடிக்கொண்டிருந்த மக்களின் ஜனநாயக உரிமைகளும், சுயாதீன செயற்பாடுகளும் இப்போது கிடைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒன்றிணைந்த ஆட்சியால் இந்த ஜனநாயகம் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே வென்றெடுத்த ஜனநாயகத்தை தக்கவைக்க வேண்டுமாயின், இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் மீண்டும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வடக்கும், கிழக்கும் தெற்கும் ஒன்றாக கை கோர்க்கும் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்.
இந்த தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான கட்சியாக செயற்பட்டாலும் ஏனைய கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகின்றது. அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் புரிந்துணர்வு அரசியலுக்கு தயாராகவே உள்ளது. ஆயினும் நாட்டின் நல்லாட்சியை குழப்பும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டே உள்ளது.
அதிகார மோகம் கொண்ட ஒரு கூட்டணி நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமேயுள்ளது. ஆகவே இப்போது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகள் அரசாங்கத்துடன் கைகோர்ப்பதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வென்றெடுக்க முடியும்.
அதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவாகும். அதேபோல் நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கைகோர்க்க வேண்டும்.
மீண்டும் நாட்டில் தமிழ், சிங்கள ஒற்றுமையைக் கட்டியெழுப்பி நாட்டை அமைதியின் பாதையில் முன் கொண்டுசெல்ல வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.