களுவாஞ்சிகுடியில் நடத்தப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 250 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுகளுக்காக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது ஆணைக்குழு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்து வந்தனர்.
வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 315 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரையில் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதுடன் நேற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெற்றன.
இதேவேளை களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் இருந்து சனிக்கிழமை 153 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணி வரையில் 70 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.