ஒருவகைக் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் ஜப்பானில் கடைசியாக 1945ல்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு தெற்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களில் ஆண்டுதோறும் 200 பேர் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்படும்போதும் உள்நாட்டில் கடந்த 70 வருடங்களுக்குப்பிறகு மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் சமீபத்தில் உறுதி செய்துள்ளது.
20 வயதுடைய டோக்கியோ இளைஞன் ஒருவனும், இதன் வடக்கே உள்ள சைடமா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் இளைஞன் ஆகியோரும் இந்த நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் இவர்கள் மூவரும் டோக்கியோவில் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் பயிலுபவர்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இவர்கள் யாருடைய நிலைமையும் கவலைப்படும்படி இல்லை என்பதையும் அரசு தெரிவித்துள்ளது.
டோக்கியோவின் மத்தியிலும், மெய்ஜி அரசர்களின் நினைவாலயம் இருக்கும் பகுதியிலும் அமைந்துள்ள பிரபலமான பசுமைப் பூங்காவான யோயோகி பூங்காவில் இவர்கள் அமர்ந்திருந்தபோது ஏற்பட்ட கொசுத்தொல்லையினால் இந்த பாதிப்பு உண்டாகியிருக்கும் என்று கருதப்படுகின்றது.
அந்தப் பகுதியில் இந்த வைரஸ் தாக்கம் கொண்ட கொசுக்கள் இல்லை என்று கண்டறிந்துள்ளபோதிலும் அவற்றுக்கான கிருமிநாசினிகள் கொண்டு அந்த இடம் சுத்தப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காய்ச்சல் நேரடியாக ஒருவருக்கொருவர் பரவுவது இல்லை. இதற்கான தடுப்பூசியோ, மருத்துவ பாதுகாப்புகளோ இல்லாத நிலையில் நோயாளிகள் நன்கு ஓய்வெடுத்து, அதிக திரவப் பொருட்களை உட்கொண்டு மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு காய்ச்சல் குறைவதற்கான மாத்திரைகளை உட்கொள்ளுவதன்மூலமே இதனை குணப்படுத்தமுடியும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.