அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க தங்களுக்கு உரிமை இல்லை என கூறிய அதிகாரிகள், உள்ளாட்சியைச் சேர்ந்த மக்கள் பிரநிதியிடம்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்றனர்.
இதைத்தொடர்ந்து, கிழக்கு கிளீவ்லேண்ட் பகுதியின் உள்ளாட்சிப் பிரதிநிதியைச் சந்தித்த முகுந்த்குமார் படேல் இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து கையொப்பமிட்டால், இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை அவருக்கு லஞ்சமாக கொடுப்பதாக ஆசை காட்டினார். இதற்கு, அந்த பிரதிநிதி மறுத்ததால், மீண்டும் அவரைச் சந்தித்து, மூன்றாயிரம், நான்காயிரம் என அவர் தொடர்ந்து ரேட்டை கூட்டி, பேரம் பேசினார்.
இதற்கு பிடிகொடுக்காமல் இருந்தவரை மீண்டும் வற்புறுத்தி நான்காயிரம் டாலர்களை முன்பணமாக வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் ஆயிரம் டாலர்களை வேலை முடிந்தபின்னர் தருகிறேன் என முகுந்த்குமார் படேல் கூறினார். இவரது தொடர்ச்சியான தூண்டுதலால் வெறுப்படைந்த அந்த பிரதிநிதி, அமெரிக்காவின் தேசிய போலீசாரிடம் (எப்.பி.ஐ.) இதுகுறித்து புகாரளித்தார். இதைப்பற்றி அறியாத முகுந்த்குமார் படேல் அவரிடம் நான்காயிரம் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்) கொடுத்தபோது, போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
‘லஞ்சம் கொடுத்து, நினைத்த காரியத்தை சாதிக்க எண்ணும் இதுபோன்ற ஆட்களை மன்னிக்கவே மாட்டோம், என தெரிவித்துள்ள எப்.பி.ஐ. போலீசார், முகுந்த்குமார் படேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசாரிடம் முறையாக புகாரளித்த மக்கள் பிரதிநிதியையும் பாராட்டினர்.