– புகழேந்தி –
பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம் என கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ந.சிவலிங்கம் தமது சகோதரர் தொடர்பான விடயத்தினை கண்ணீர்மல்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 255 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதன் போது பதியப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்ட சாட்சியம் முன்வைக்கப்பட்டது.
குறித்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
‘நடராஜா செந்தூரன் (19) எனது இளைய சகோதரர் பாடசாலைக்கு செல்லும் போது 2000.11.19 ஆம் திகதியன்று காணமால் போயிருந்தார்.
அருகில் உள்ள கறுவாக்கேணி வித்தியாலயத்திலே கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம்.
எனது சகோதரனின் சடலத்தினை ஏறாவூர் வைத்தியசாலையில் இருந்தே பெற்றுக் கொண்டோம். இது வரைக்கும் எனது சகோதரன் யாரால் கொல்லப்பட்டார் என அறியமுடியவில்லை.
அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன. இதேபோன்று எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸ்வரன் (29) 2005 காலப்பகுதியில் காணமல் போயிருந்தார்.
மாவடிவேம்பு வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது.
இதேபோன்று எனது மூத்த சகோதரர் ந.விணாயகமூர்த்தி (31) 1985 இல் காணாமல் போனார். கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன்வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணாமால் போயிருந்தார்.
இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றார்கள் என அப்பகுதி பொது மக்கள் சிலர் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவினை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
நானும் எனது சகோதரங்களும் அம்மா இல்லாமல் மிக துன்பப்பட்டு வாழ்ந்தோம். இவ்வாறன நிலையிலேயே எனது சகோதரர் 3 பேர்களையும் எனது சகோதரியின் கணவரையும் இழந்துள்ளோம்.” என கவலையுடன் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொணடு வருகிறது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 255 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.vk