நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அண்மைய நாட்களாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமுள்ளன.
இது குறித்து ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விருப்பு வாக்குகள் எண்ணும்போது வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இணைந்து செயற்படும் போது இவ்வாறான முறைகேடுகள் நடைபெற முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தமது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட விதம் சந்தேகத்திற்குரியதென குறிப்பிட்டுள்ளதோடு அதனை மீள எண்ணுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியான போது குறிப்பிடப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் காணப்படுவதாகவும் இது குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தேச விடுதலை கட்சியின் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.