இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக்கட்சி எடுத்த முடிவு தவறானது. சுதந்திரக் கட்சிகக்கு வாக்களித்த மக்களின் மனோநிலை மற்றும் சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பவற்றின் அடிப்படையில் இது தவறானது. அது பொதுமக்களின் வாக்குப் பலத்தை பலவந்தமாக சிதைப்பதற்கு ஒப்பானது. எனவே இதனை எதிர்த்து எதிர்க்கட்சியாக செயல்பட தீர்மானித்துள்ளோம்.
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஐக்கிய தேசியக்கட்சி அதன் முதலாளித்துவ கொள்கைகளையே தொடர்ந்தும் முன்னெடுக்கும். அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல், தேர்தல் சட்டங்களில் சீர்திருத்தம், தகவல் அறியம் உரிமைச்சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்தால் அது பொதுமக்களின் வெற்றியாக இருக்கும் என்றும் வாசுதேவ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.