Breaking
Sun. Dec 22nd, 2024

பெற்றோர்களே, குழந்தைகளிடம் நீங்கள் அன்பு காட்டுவது சரிதான்! அதற்காக அவர்களின் கையை விடாமல் அவர்களுடனே பயணிக்க எண்ணக்கூடாது. நம்மிடமிருந்து உருவானதால் அவர்களது வாழ்வை, வாழவிடாமல் நம் இசைக்கு அவர்களை ஆடவிட்டு நெருக்கக் கூடாது.

நாம் சிறு வயதில் பாடக் கற்றிருக்கலாம், ஆடக் கற்றிருக்கலாம் என்கிற நமது ஆசைகளை குழந்தைகள் மீது சுமையாய் ஏற்றக் கூடாது. அவர்கள் குழந்தையாக சுற்றித் திரிய, தமது மனம் எந்தப் பக்கம் போக விரும்புகிறது என்பதை அறிவதற்காகவாவது அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை இதுபோன்று நாம் கட்டுப்பாடாக அட்டவணையிட்டு வளர்க்கும்போது, அவர்கள் தன்னிச்சையாக எல்லா செயல்களை செய்வதற்கும், முடிவெடுக்கவும் முடியாமல்போவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெற்றோர் போடும் அட்டவணைக்கு ஏற்றாற்போல் அவர்கள் செயல்பட முடியாமலும் போகலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் சுமார் எழுபது 6 வயது குழந்தைகளுடன், அவர்களது பெற்றோர் பங்கேற்றனர். பள்ளிக்குப் பிறகு தன்னிச்சையாக விளையாடிக்கொண்டோ, பிடித்த புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள், சற்றே தெளிவாகவும், பொறுப்பாகவும் தமது வேலைகளை கவனித்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

எனவே, குழந்தைகளை வழிமுறைப்படுத்துவதில் மட்டுமே நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் மீது நமது பழைய ஆசைகளை திணித்து பொதி சுமக்கும் கழுதையாய் அவர்களை மாற்றிவிடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

Related Post