சபாநாயகர் பதவி என்பது இந்நாட்டு பாராளுமன்றின் உயரிய பதவியாகும். அதேபோல் நாட்டின் மூன்றாவது உயர்ந்த பதவியாகும் என புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அவ்வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு ஆண்டுகள் இணைந்து செயற்படவேண்டும். புதிய பாராளுமன்றம் முறையாக செயற்பட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கவை.
நாம் அனைவரும் இணைந்து செயற்பட முடியும். சபையில் நடத்தை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சபையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. செயற்குழு முறை, மாவட்டசபை முறை, வரவுசெலவு திட்டக்குழு முறை, உறுப்பினர்கள் இடவசதி, விசேட ஆராய்ச்சி நிறுவனம் என்பன குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது என அவ்வாழ்த்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டாவது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்கலநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தனர்.
பாராளுமன்றின் ஆளும் கட்சி பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் அவை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்றம் இன்று மாலை 3 மணிவரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் உரை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.