திப்பிட்டிகொட, ஹுனுபிட்டிய மொஹியத்தீன் பள்ளிவாசலில் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து சமயக் கடமைகளையும் இடையூறுகள் எதுவுமின்றி நடத்துவதற்கு கடவத்தை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவு வழங்கியதுடன் கிரிபத்கொட பொலிஸினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை நிராகரித்தார்.
இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த சமய கடமைகளுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹுனுபிட்டிய மொஹியதீன் பள்ளிவாசலின் மேல்மாடி சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்படுவதாகவும் இது ஒரு மத்ரஸாவேயன்றி பள்ளிவாசல் அல்ல.
அதனால் சமயக் கடைமைகளைத் தொடர முடியாதெனவும் இது அப்பகுதி மக்களின் அமைதிக்குப் பாதிப்பாக இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பெளத்த குருமார் ஒருவர் கிரிபத்கொட பொலிஸில் செய்த முறைபாட்டுக்கமைய அவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னைய விசாரணைகளின் போது இது அடிப்படை உரிமை மீறல் எனவும் ஜனநாயக உரிமை மீறல் எனவும் தெரிவித்து இவ்வாறான ஒரு வழக்கினை பொலிஸாரால் 106 ஆம் பிரிவின் கீழ் தொடர முடியாதெனவும் பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டு வந்தனர்.
பள்ளிவாசலின் மேல்மாடி நிர்மாணத்துக்காக வக்பு சபையின் அனுமதியையும் புத்தசாசன அமைச்சின் அனுமதியையும் பெற்று வரும்படி நீதிவானால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது விடயத்தில் புத்தசாசன அமைச்சுக்கு எதுவித தொடர்புமில்லை எனவும் வக்பு சபையே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எனவும் நீதிவானிடம் ஏற்கனவே சட்டத்தரணிகளால் விளக்கப்பட்டது.
106 ஆம் சட்டப் பிரிவின் கீழ் இந்த வழக்கு பொலிஸாரால் தொடரப்பட முடியாது என்று வாதிடப்பட்டதையடுத்து பௌத்தகுரு, பொலிஸ், பிரதேச செயலாளர் அலுவலகம், பள்ளிவாசல் நிர்வாகம் என்பன ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வரும்படி ஏற்கனவே நீதிவானால் வேண்டப்பட்டிருந்தது.
ஆனால் பௌத்த குருவும் பொலிஸாரும் ஏனையத் தரப்புகளும், சமாதானத்திற்காக 18 வயதுக்கு கீழானவர்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல முடியாது, தொழுகை நடத்த முடியாது, பள்ளிவாசல் மதிலை உயர்த்தமுடியாது, ஒலி பெருக்கி உபயோகிக்க முடியாது என்ற நிபந்தனைகளை விதித்ததால் பள்ளிவாசல் நிர்வாகம் அதற்கு உடன்படவில்லை.
நீதிவான் ஏற்கனவே பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணங்களை கோரி அதனை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் உறுதி செய்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் நிர்வாகம் வக்பு சபையில் இந்த மத்ரஸாவை பள்ளிவாசலாக பதிவு செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் RRT அமைப்பின் சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன், நிராஷா கமகே, மைத்திரி குணவர்தன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.