நாட்டை பிரிக்க ஆயுத முனையில் முடியாது போனதால் அரசியல் ரீதியாக அதனை முன்னெடுக்க ஆயுதக் குழுக்களின் அரசியல் பிரதிநிதிகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக உதய கம்மன்பில எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததால் முதல் நாள் சபை அமர்விலேயே சர்ச்சை தலைதூக்கியது.
இவ்வாறு சபையில் ஆயுதங்கள் தொடர்பாக உரையாற்ற முடியாது என உதய கம்மன்பில எம்.பி.யின் உரைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
எட்டாவது பாராளுமன்றத்தின்முதலாவது சபை அமர்வு, சபாநாயகராக தெரிவான கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம் பெற்றது. இதன் போது புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து கட்சித் தலைவர்கள் சபையில் உரை நிகழ்த்தினர்.
இந்த வரிசையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யான உதய கம்மன்பில தனது பாராளுமன்ற கன்னி உரையின் போது மேற்கண்டவாறு தெரிவித்ததாலேயே சர்ச்சை கிளம்பியது. சபையில் உரையாற்றிய உதய கம்மன்பில எம்.பி., ஆயுதப் போராட்டத்தால் நாட்டை பிரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது தோல்வியடையச் செய்யப்பட்டதோடு அம்முயற்சி வெற்றிப் பெறவில்லை.
இன்று அம்முயற்சி ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகளால் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்காக சமஷ்டி முறையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.
இதன் போது சபையில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் ஆயுதங்கள் தொடர்பாக உரையாற்ற முடியாது. எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஆனால் அதனை பயன்படுத்தி ஆயுதங்கள் தொடர்பில் சபையில் உரையாற்ற முடியாது என தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் ஆளுந்தரப்பு எம்.பி.க்கள் மத்தியில் இவ்வுரைக்கு எதிராக சல சலப்பு ஏற்பட்டதோடு சுசில் பிரேமஜயந்த எம்.பி. இதன் போது தலையில் கைவைத்தபடி அமர்ந்திருப்பதை காணமுடிந்தது.இவ்வாறானதொரு நிலையில் உதய கம்மன்பில எம்.பி. தனது உரையை முடித்து ஆசனத்தில் அமர்ந்தார்.