ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது. முன்
னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பிற்பகல் பொலநறுவையில் கதுருவெல ரஜரட்ட நவோதைய மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கட்சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவார் என தெரிவிக்கப்பட போதிலும் நேற்றைய மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டபின் அவரது தலைமையில் நடைபெற்ற முதலாவது கட்சி மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மேடையில் அருகருகே இருந்து உரையாடிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.