பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதல்ல என்பது உண்மைதான். இஸ்லாமிய அரசின் ராஜ காரிய அலுவல்களின் கேந்திரமாக பள்ளிவாயல்கள் காணப்பட்டன.ஸகாத் சேகரிப்பு, போருக்குப் படை திரட்டுதல்,கனீமத் பொருட்கள் பகிர்ந்தளித்தல், குற்றவிசாரணைகள் நடத்துதல்,வெளிநாட்டு அரசதானிகளைச் சந்தித்தல் போன்ற பலவகையான நோக்கங்களுக்காக பள்ளிகள் பாவிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லைதான்.
ஆனால் ஹசனலி அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என ஏன் அறிக்கை விட்டீர்கள் என்ற கேள்விக்கு பள்ளிகள் தொழுகைக்காக மாத்திரம் அல்ல என்ற பதில் சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
இவர்கள் இஸ்லாத்தை தனது வாசிக்காகப் பயன்படுத்துபவர்கள். இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகள் பற்றிப் பேசவே அக்காலத்தில் பள்ளிகள் பாவிக்கப்பட்டன. ஹஸனலிக்கு தேசியப்பட்டியலுக்காக அறிக்கை விடுவது ஏதோ இஸ்லாமியக் கோட்பாட்டை நிலைநாட்ட பகிரதப்பிரயத்தனம் எடுப்பதுபோல் ஒரு மாயையை தோற்றுவிக்க முயல்கிறார்கள்.
இஸ்லாம் தெரியாத நெல் வியாபாரிகளின், கொந்தராத்துக்காரர்களின்,நகைக்கடை முதலாளிகளின் அரசியல் வாதிகளின் அடிவருடிகளின் கைகளில் பள்ளி நிர்வாகங்களைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.
ஒரு அரசியல் வாதிக்கு ஆதரவு தேடும் போதும்,அவருக்கு தேசியப்பட்டியல் வேண்டி தேம்பியழும் போதும்தான் “பள்ளிகளின் வகிபங்குகள்”எல்லாம் இவர்களுக்கு ஞாபகம் வருகின்றன.
சிரியாவில் முஸ்லீம்கள் கொத்துக் கொத்தாய்க் கொல்லப்படும்போது மக்களுக்கு ஆகக்குறைந்தது உலக வரைபடத்தில் சிரியா எனும் ஒரு நாடிருக்கிறது என்று சொல்ல முடியாது, பர்மாவில் உயிர்களை உருட்டி விளையாடும் எமது சொந்தங்களுக்காய் ஒரு கவளம் சோற்றை அனுப்ப முடியாது, ஞானசாரவுக்கு எதிராய் ஒரு ஊமை ஊர்வலமாவது நடத்த முடியாது, ஊர்களுக்குள் பரவிக்கிடக்கும் பித்ஆக்களுக்கு எதிராக சுண்டுவிரலையேனும் எழுப்பமுடியாது, பள்ளிவாசலுக்குள் சாம்பிராணிப்புகையும், ஆராதனையுமாக கிடக்கும் கல்லறைகளின் ஒரு கல்லையாவது கழற்றி எறியமுடியாது, வட்டிக்காக வங்கியில் வரிசையாய் நிற்கும் எம்மவர்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தையாவது வட்டியில்லாமல் கொடுக்கமுடியாது,மாலைநேரவகுப்புகள் என்று சேரழிந்து செல்லும் எம் பெண்களுக்கு ஒரு கல்வி ஏற்பாடு செய்ய முடியாது இவர்களால்,
ஆனால் அதாவுல்லாஹ்வுக்கு வாக்குப் போடுங்கள் என்பதற்கும்,ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கொடுங்கள் என்பதற்கும்,மஹிந்தவுக்கு கையேந்தி துஆ கேட்பதற்கும் ‘பள்ளிகள் தொழுகைகள் நிறைவேற்றமட்டுமல்ல” என்று ஆன்மீகம் அள்ளிக்கொண்டு வருகிறது இவர்களிடம்.
அரசியல் வாதிகள் பள்ளிகளை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.பள்ளிநிர்வாகிகள் இஸ்லாத்தை அரசியல் வாதிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.
நிர்வாக சபைக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களைத் தெரிவு செய்வது,பள்ளி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அரசியல் வாதிகளின் பிரிக்கமுடியாத பண்பாகிவிட்து.
பின்னர் தேர்தல் வந்தால் ‘பின்னேரமாகிவிட்டது தயவு செய்து எமது தலைவருக்கு வாக்களியுங்கள்’ என்று மைக்கில் கத்துவதற்கும்,’தேசியபட்டியலை எங்கள் தலைவருக்கே கொடுங்கள்’ என்று அறிக்கை எழுதுவதற்கும்,’பள்ளிவாயல் சம்மேளனம் உன்னோடுதான்’ என்று போஸ்டர் ஒட்டுவதற்கும்,பெயர் மாத்திரம் சொல்லாமல் அவருக்கு வாக்களியுங்கள் என்று மிம்பர் மேடைகளில் கூவிக் கூப்பாடு போடுவதற்கும் தான் இந்த நிர்வாக சபைகள் பயன்படுகின்றன.
எமது பள்ளி நிர்வாகசபைகளைப் பார்க்கும்போது ஈசா நபிக்கு எதிராக ஜெருசலத்தின் ரோம ஆட்சியாளனோடு ஒன்று சேர்ந்த யூத மதகுருமார்களின் ஞாபகம்தான் வருகிறது.
ஆட்சியாளனின் அடாவடித்தனத்தை மார்க்கரீதியாக நியாயப்படுத்தி மக்களை அமைதிப்படுத்த மார்க்கவாதிகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவது வரலாற்றிற்கு ஒன்றும் புதிதல்ல.
சவுதி மன்னர் அப்துல் அஸீஸ் மேற்குலகோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவருக்கு எதிராக இஹ்வான்கள் கிளர்ந்தெழுந்தபோது அவர்களை அடக்க அப்துல் அஸீஸ் பயன்படுத்தியது அக்கால சவுதி உலமாக்களின் பத்வாக்களைத்தான்.
வளைகுடா யுத்தத்தில் சவுதி மண்ணுக்கு முதல் முதலில் அமெரிக்க காபிர்கள் தடம்பதிக்க மன்னர் பஹத் நாடியது அக்கால பிரபலமான ஒரு அறிஞரைத்தான்.காபிரான ஆட்சியாளருக்கு எதிராக போர்தொடுக்க முடியும் என்ற இமாம் இப்ன் தைமியாவின் பிரபல்யமான “மர்தீன் பத்வாவை” இல்லாமல் செய்ய அமெரிக்கா சில வருடங்களுக்கு முன் நாடியது உலக இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமொன்றைத்தான், ஜிஹாதை ஆதரிக்கும் முஸ்லீம்களின் மனநிலைகளை மாற்றி அவர்களை நவீன முஸ்லீம்களாக மாற்ற அமெரிக்காவுக்கு Rand cooperation கொடுத்த திட்டம் முஸ்லீம் உலமாக்களை வாங்குவதுதான் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
அன்று ரோம ஆட்சியாளர்கள் செய்ததை,இன்று அமெரிக்கா செய்வதை,இப்போது நிந்தவூரின் ஹஸனலியும்,அக்கரைப்பற்றின் அதாவுல்லாஹ்வும், கல்முனையின் ஹரீசும் செய்கிறார்கள் அவ்வளவுதான்.
பள்ளி நிர்வாகங்களை வயது முதிர்ந்த,இஸ்லாம் தெரியாத, புரியாத,வெள்ளைச்சாரனும்,வெள்ளைச் சேட்டும் அணிந்து,மையத்து அத்தரும், அடித்துக்கொண்டு செல்லும் ஞானப்பழங்களின் கைகளில் நாம் கொடுத்ததன் விளைவுகள்தான் இவை.பள்ளி நிர்வாகம் இஸ்லாத்தைக்கற்ற காற்சட்டையும், ரீ சேடும் அணிந்த, அந்தப் படித்த இளைஞனின் பணியில்லை என்று நாம் நினைத்ததால் வந்த வினைகள்தான் இவை.நூறு பேரை வைத்து ஒரு கம்பனியை நிர்வகிக்க முன்னுக்கு வரும் நாம் பள்ளிகள் என்று வரும்போது பாய்ந்தோடி ஒழிந்ததால் வந்த பலன்கள்தான் இவை.
இறுதியில் குறைகளைக் காண்பதற்கு மாத்திரம்தான் எமது நாக்குகள் எழும்புகின்றன.விரால்கள் ஓடி ஒழிந்ததன் பின் வேலியே பயிரைமேய்ந்தால் என்று பழமொழி பாடித்திரிவதில் என்ன பயனிருக்கிறது.
– Raazi Muhammadh Jaabir –