தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து நாட்டில் எதிர்க்கட்சிக்கான பணியை சரியாக செய்யும். எதிர்க்கட்சியாக செயற்படும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவசியமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது இன்று ஒருசிலருக்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் ஒருசிலர் மிகவும் அதிர்ச்சியடையும் வகையில் நேற்று செயற்பட்டனர்.
ஆனால் எம்மை பொறுத்தவரையில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவியை வழங்கியமையை மிகவும் நல்லதொரு விடயமாகவே கருதுகின்றோம்.
அதேபோல் அவசியமான நேரத்தில் மிகவும் முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் நாட்டின் நல்லாட்சியின் ஒரு அம்சமாக கருதுகின்றோம். அதையும் தாண்டி நாட்டில் மிகப்பெரிய சிக்கலில் இருந்து நாம் தப்பியுள்ளோம் என்பதும் உண்மையான விடயமே.
அதாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய ஆறு கட்சிகளே உள்ளன.
இந்த கட்சிகளில் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒன்றிணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்துள்ளன. ஆகவே இந்த கட்சிகள் மூன்றும் ஆளும் கட்சியாகவே கருதப்பட வேண்டும்.
அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி யார் என்று பார்க்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சி பதவிக்கு ஏற்ற தகுதிகளை பெற்றுள்ளது. ஆசன எண்ணிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அந்த வகையில் எதிர்க்கட்சி பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டமை நியாயமானதே.
மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒருசிலர் தாம் எதிர்க்கட்சிக்கான வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சி பதவியை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் மூலம் சபாநாயகருக்கு கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அந்த வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தான் எதிர்க்கட்சி பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அனைத்து வகையிலும் இம்முறை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவாகும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களுக்கு அந்த பொறுப்பை வழங்காவிட்டிருந்தால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதன்மை கட்சியாகும். அவர்களை புறக்கணிப்பது நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை புறக்கணித்தமைக்கு சமமானதாகும்.
ஆகவே இம்முறை அவர்களை புறக்கணித்திருந்தால் அது உள்நாட்டிலும்,சர்வதேச மட்டத்திலும் மிகப்பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியிருக்கும். ஆகவே அதில் இருந்து எமது நாடு தப்பியுள்ளது.
மேலும் எதிர்க்கட்சி என்பது நாட்டில் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் கட்சியாகும். அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளை ஆதரிப்பதைப்போல் தவறுகளை சுட்டிக்காட்டும் மிக முக்கிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உள்ளது. ஆகவே அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதேபோல் நாமும் இப்போது எதிர்க்கட்சியின் பக்கமே உள்ளோம்.
சம்பந்தன் எதிர்க்கட்சி பதவியை ஏற்றவுடன் என்னை எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக பரிந்துரைத்தார். ஆகவே அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து நாட்டில் எதிர்கட்சிக்கான வேலையை சரியாக செய்யும்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் நிலையில் ஜே.வி.பி உள்ளதா?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை. நாம் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டுள்ளோம்.
எனினும் அவர்களின் கொள்கைத்திட்டம் எமது கொள்கைத்திட்டத்தை விட மாறுபட்டது. அதை நாம் பேசி தீர்த்துக்கொள்ள முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் இந்த நாட்டில் தனிநாட்டை கோரவில்லை. ஆயுத கலாசாரத்தையும் ஆதரிக்கவில்லை. கடந்த தேர்தலின் போதும் அவர்கள் நல்லாட்சியின் பக்கம் நின்றே செயற்பட்டனர்.
ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியும். அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சியாக செயற்படும் வேளையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிடமாட்டோம்.
அவசியமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.