அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்கிறது. இவற்றுக்கு ஆதரவு வழங்குவது யார் என்பது எமக்கு தெரியும். இவ்வாறான நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் ஆளும் ஐ.ம.சு.கூ. க்கு ஆதரவு வழங்குவார்கள்.
இனி ஒருபோதும் ஜே.வி.பி.யும் ஐ.தே.கட்சியும் ஒன்று சேரப்போவதில்லை. ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவை பல கட்சிகள் முஸ்லிம்களைக் கொண்டு சவாரி செய்யப்பார்க்கின்றன. ஏன் அவர்கள் சிங்களவர்களை தம்வசப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பது கேள்வியாகியுள்ளது.
ஜே.வி.பி. முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகிறது. ஜே.வி.பி. யினால் முஸ்லிம்களுக்கு எதையும் செய்திட முடியாது. அவற்றுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் சோரம்போக மாட்டார்கள்.
ஊவா தேர்தலில் அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களை கண்டுகொள்ளவில்லை என்பதை அரசு சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரையேனும் களமிறக்கப்படாததை வெளிக்காட்டியுள்ளது. இதனை மறைக்கவோ தற்போது எமது கூட்டமைப்பு அவர்களின் கடிவாளம் கைக்கூலிகள் என கூறி வருகின்றனர். இவையெல்லாம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஊவா முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.