சிரியாவில் உள்நாட்டுச் சண்டை ஆரம்பமானது முதல் அங்கிருந்து வெளியேறிய 25 லட்சம் அகதிகளை வரவேற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
“சிரியா அகதிகளை சவூதி அரேபியா அலட்சியம் செய்கிறது’ என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாடு அவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து சவூதி அரேபிய அரசுச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:
சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து, அங்கிருந்து தப்பி வந்த 25 லட்சம் பேரை நாங்கள் வரவேற்றுள்ளோம்.
அவர்களில் லட்சக்கணக்கானோருக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான உரிமை வழங்கியுள்ளோம்.
சிரியாவிலிருந்து வெளியேறி சவூதி அரேபியாவில் தங்கியுள்ளவர்கள் மட்டுமின்றி, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவும் 70 கோடி டாலர்கள் (சுமார் ரூ.4,637 கோடி) நிதி வழங்கியுள்ளோம்.
அந்த நாடுகளில் தஞ்சமடைந்துள்ள சிரியா மக்களுக்காக உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் வழங்கவும், மருத்துவமனைகள், தங்கும் முகாம்கள் அமைப்பதற்கும் நாங்கள் உதவியுள்ளோம்.
சவூதி அரோபிவுக்கு வந்துள்ள சிரியா மக்களை “அகதிகள்’ என்று அழைத்து, அவர்களது கௌரவத்தைக் குலைக்க நாங்கள் விரும்பவில்லை.
மேலும், மனிதாபிமான அடிப்படையிலும், மத அடிப்படையிலும் சிரியா மக்களுக்குச் செய்யும் உதவிகளைத் தம்பட்டமடித்துக் கொள்வதிலும் எங்களுக்கு விருப்பமில்லை.
எனினும், அகதிகள் விவகாரத்தில் எங்களைக் குறை கூறும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், இந்த உண்மைகளை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.