ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை, இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், அனைத்துலக நாடுகளின் கவனமும் ஐ.நா பக்கம் திரும்பியுள்ள அதேவேளை, இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஜெனிவாவில் மூன்று வார காலம் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. .
இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைசசர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது.
இக்குழுவினர் ஏற்கனவே ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல் நாள் அமர்வில் சிறப்புரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை நீதித்துறையின் சுயாதீன தன்மை மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பான ஆக்கபூர்வ தெளிவு என்பவற்றை சர்வதேசத்திற்கு எடுத்தரைப்பார் என ஹர்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்இ இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, அது இந்த அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகள் கொண்டிருந்த அழுத்தம், தற்போது சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் நெகிழ்ச்சியான போக்கையே கொண்டுள்ளது.
இந்நிலையில், யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை எந்தளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக அமையுமென்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
குறிப்பாக இலங்கைக்கு சார்பான பிரேரணையொன்றை ஐ.நா அமர்வில் முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில். யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இலங்கை. இந்தியா மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் மற்றும் யுத்தக் குற்றம் தொடர்பான சாட்சியங்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள சனல் – 4வின் ஆவணப் படத்தையும் இந்த அமர்வில் திரையிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கூட்டத்தொடரில் பங்கேற்கும் உலக நாடுகள். இலங்கை மீது அழுத்த்ததை பிரயோகிக்கக்கூடுமென நம்பப்படுகிறது.
மொத்தத்தில் வெளிவரவுள்ள அறிக்கை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமா அல்லது உள்நாட்டு விசாரணையை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா என்பதே அனைவரும் கேள்வியாக உள்ளது.