அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டப்புற லயம் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்கவுள்ளோம் என மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது மலையகத்திற்கு எந்தவொரு அபிவிருத்தியையும் கொண்டுவராத அராஜகப் போக்கிலான அரசியலை நாம் மீண்டும் தொடரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்இ நடந்து முடிந்த பொது தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்தும் அதிகமான வாக்குகளை தந்து என்னை வெற்றி பெறச்செய்துள்ளனர். தேர்தல் பிரசார மேடைகளில் எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் திகாம்பரம் என்பவர் 100 நாட்களுக்கு மாத்திரமே அமைச்சர் என்று பலவாறு குறிப்பிட்டனர். தேர்தலில் திகாம்பரம் தோல்வி அடைவார் என்றும் குறிப்பிட்டனர்.
கடந்த காலங்களில் மலையக அரசியல் தலைமைகளுக்கு வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு என்ற நல்ல அமைச்சுக்களின் கிடைத்த போதிலும் மலையக மக்களின் விடிவுக்காக எதனையும் செய்யவில்லை. வெறுமனவே மாடிவீடுகளுக்கு மாத்திரமே வழிவகுத்தனர். மலையகத்திற்கு மாடி வீடு பொருந்தாது.
அது மாத்திரமின்றிஇ முன்னைய அமைச்சர்களினால் மக்களுடைய பணம் பெருமளவு மோசடி செய்யப்பட்டது. இந்நிலையில் 100 நாள் அரசாங்கத்தின் 400 தனிவீடுகளை நிர்மாணித்தோம். அடுத்த ஐந்த வருடத்தில் குறித்த வீடுகளை நாம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் மலையக மக்கள் முகங்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வளமான மலையகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். எனக்கு இந்த அமைச்சை வழங்குவதற்கு முன்பு பிரதமர் இனிமேல் தோட்டம் என்ற பெயர் பாவனைக்குட்படுத்தக் கூடாது. மலையக கிராமம் என்றே பிரயோகிக்க வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாகவே இவ்வாறானதொரு அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டபுற லய வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையக கிராமமொன்றை உருவாக்கவுள்ளோம் என்றார்.