Breaking
Mon. Nov 18th, 2024

அமெரிக்காவில் டெக்ஸாஸ் இர்விங்கில் வசிக்கும் அகமது முகமது.. 14 வயதுச் சிறுவன். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

எலெக்ட்ரானிப் பொருட்களை புதிது புதிதாக வடிவமைப்பது அவனுடைய பொழுது போக்கு. கடந்த திங்கள் கிழமையன்று தான் லேட்டஸ்டாக வடிவமைத்த எலெக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் அகமது.

அவனது வகுப்பாசிரியரிடம் சென்று காட்டியவுடன், “நன்றாக இருக்கிறது. ஆனால் வேறு யாரிடமும் இதைக் காட்ட வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ஆங்கிலப் பாடம் நடந்து கொண்டிருந்த போது அந்த கடிகாரம் ’பீப் பீப்’ ஓசை எழுப்ப ஆரம்பித்து விட்டது.

அவ்வளவு தான்.. ஒட்டு மொத்த வகுப்பறையும் பதறி விட்டது. அகமது வைத்திருந்த கடிகாரத்தைப் பார்த்த ஆங்கில ஆசிரியை, “அதைப் பார்த்தால் வெடிகுண்டு போலத் தெரிகிறதே” என்று  கேட்டிருக்கிறார். “எனக்கு அதைப் பார்த்தால் வெடிகுண்டு போலத் தெரியவில்லையே” என்று இதற்கு சொல்லியிருந்திருக்கிறான் அகமது.

அது போதாதா?

சற்று நேரத்தில் வகுப்பிலிருந்து கைது அழைத்துச் செல்லப்பட்ட அகமதுவை, பள்ளிக்கூட தலைமையாசிரியரின் அறையில் வைத்து ஐந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்திருக்கிறார்கள். அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவனது கை ரேகைகளையெல்லாம் பதிவு செய்து, விசாரணை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறான் அகமது.

விசாரணையின் போது அவனது பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அவர்களைத் தொடர்பு கொண்டு பேசவும் விடவில்லை.

பள்ளிக்கூட நிர்வாகம் மற்றும் அரசுத் தரப்பிலிருந்து, “சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதைப் பார்த்தாலும் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறோம். பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டியது நிர்வாகத்தின் கடமை” என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பிலோ, “ஆரம்பம் முதலே அது ஒரு கடிகாரம் என்று தான் அகமது கூறி வந்திருக்கிறான். எதற்காக இது வடிவமைக்கப்பட்டது என்றும் விசாரித்து வருகிறோம். அகமதுவை கஸ்டடியில் எடுத்து மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமா என்று முடிவெடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த விஷயம் குறித்து விசாரித்து வரும் அதேவேளை, இந்த விடயம் சமூக வலைகளில் தீயாக பரவியதை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, ” சிறுவன் அஹ்மத் அந்த கடிகாரத்துடன் வெள்ளை மாளிகைக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க தயாராக உள்ளோம்” என்ற தொனியிலும், பேஸ்புக் உரிமையாளர் மார்க் சுக்கர்பேர்க், ” ஆகியோரும் அஹ்மதுக்கு சார்பாக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post