பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு முதல் முறையாக தெற்காசியாவுக்கு வெளியே இருதரப்பு விஜயமாக நரேந்திர மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். கலாச்சார, பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் ஒன்று ஜப்பான் என்று மோடி கூறியுள்ளார்.
க்யோட்டோ நகரை வந்தடைந்த பிரதமர் மோடியை நேரடியாக வரவேற்க ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே டோக்யோவில் இருந்து 400 கிலோ மீட்டர் பயணித்து க்யோட்டோவுக்கு வந்தது முன்னுதாரணமற்ற ஒரு செயல் என்று ஜப்பானிய பார்வையாளர்கள் கூறுகின்றனர். பிரதமர்மோடியுடன் முன்னணித் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானியும், ஆசிம் பிரேம்ஜியும் சென்றுள்ளனர்.
மோடியை ட்விட்டரில் பின்தொடரும் ஜப்பானியப் பிரதமர், மோடி பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே ஜப்பானுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே ஜப்பான் சென்றுள்ளார். அபேயை சந்தித்துள்ளார். இந்த இருவருக்குமான தனிப்பட்ட நல்லுறவும், இரு நாடுகளின் பரஸ்பர தேவைகளும், பலமான சீனாவை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் இந்த இரு நாடுகளையும் நெருங்கிவரச் செய்துள்ளன
சரக்கு ரயில்களுக்கான பிரத்தியேகப் பாதைகளை அமைக்க ஏற்கனவே பெருமளவில் கடனுதவி செய்து வரும் ஜப்பான், அதி உயர் ரயில்களை இந்தியாவில் அமைப்பது உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய விரும்புகிறது. இந்தியக் கடற்படையின் தேவைக்காக கடல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.