சர்வதேச தரத்திலான விசாரணையையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கலப்பு நீதிமன்றம் என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளதே தவிர இது சர்வதேச விசார ணையல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் மற் றும் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்திருப்பதாவது, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை வந்த ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனிடம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளக விசாரணை கள் நடத்தப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே உறுதி மொழி வழங்கினார்.
ஆனால் அது நிறைவேற்றப்படாததன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தது.
ஐ.நா.வும் சர்வதேசமும் இந்த நிலைபாட்டை எடுக்கையில் மஹிந்த தோல்வி கண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசு பதவியேற்றது. இவ்வாறானதொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் எமக்கெதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயமும் காணப்பட்டது.
புதிய ஆட்சி எமது அரசு பதவியேற்றதும் சர்வதேசம் எமக்கு சாதகமான நிலைப்பாட்டையும் ஆதரவையும் வழங்க ஆரம்பித்துள்ளது. சர்வதேசத்துடன் நட்புறவுடன் செயற்பட்டு இப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் முயற்சிக்கின்றோம்.
கலப்பு நீதிமன்ற விசாரணையென்பது சர்வதேச நீதிமன்றம் அல்ல. சர்வதேச தரத்திலான நீதி விசாரணைக்கே ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியுள்ளது. சர்வதேசத்திற்குத் தேவையான விதத்தில் விசாரணையென இதனை அர்த்தப்படுத்த முடியாது. இப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு கடந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை.
ஐ.நா. வுக்கு இராணுவத்தினூடாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சர்வதேசத்துடன் சர்வதிகாரமாக நடந்து கொண்டதே தவிர நட்புறவுடன் செயற்படவில்லை.
இன்று நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கையை உருவாக்கியுள்ளோம்.
சர்வதேச விசாரணையில்லாமல் உள்ளக விசாரணைக்கு வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டையும் எமது படையினரையும் பாதுகாக்க முடியும். அது மட்டுமல்லாது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்ததன் மூலம் தேசியப் பிரச்சினைக்கும் சுமுகமான தீர்வைக்காணமுடியும் என்றும் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.