ஐ.நா.மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் பணிகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. குறித்த பிரேரணைக்கு ஆதரவு பெறும் வகையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது என்று அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சர்வதேச தரத்துடன் கூடிய உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா பிரேரணைக்கு பல நாடுகளின் ஆதரவு கிடைப்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பில் வினவிய போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு மேலும் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
விடுதலை புலிகளுடனான போரின் இறுதி கட்டத்தின் போது பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றத்தை கட்டமைத்து அதனூடாக உண்மைகளை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ஹூசைன் வௌியிட்ட அறிக்கை குறிப்பிடுப்பட்டுள்ளது.
மேற்படி சர்வதேச நீதிபதிகளுடனேயே குறித்த கலப்பு நீதிமன்றம் நிறுவப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் உள்ளக பொறிமுறையினூடாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இலங்கை என்பது சுயநிர்ணயமிக்க நாடாகும். அதனை கொண்டு எமது வேலைத்திட்டங்களை நாம் செயற்படுத்த வேண்டும்.
ஆகவே அரசாங்கம் என்ற வகையில் எமது வேலைத்திட்டத்தை நாம் சர்வதேசத்திற்கு முன்வைக்க வேண்டும். தற்போது இது இது தொடர்பிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நாட்டிற்கு உகந்த தீர்மானத்தை எடுக்கும் நேரமாகும். இந்த தருணம் சர்வதேச நாடுகளுடனும் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடும் நேரமாகும். உள்ளக பொறிமுறையை எவ்வாறு கட்டமைப்பது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.
ஆகவே அரசாங்கம் என்ற வகையில் உள்ளக பொறிமுறையை எவ்வாறு கட்டமைப்பது என்பது தொடர்பில் பேசுவதற்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச அச்சுறுத்தல்களிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். சுயநிர்ணயமிக்க நாட்டை பாதுகாப்பதனை கொண்டுதான் அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கமைய அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முன்னைய ஆட்சியினர் விட்ட தவறுகளை புதிய அரசாங்கம் திருத்த வேண்டியுள்ளது. ஆகவே பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்.
மேலும் எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு ஆதரவான பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் திறமைவாய்ந்த எமது ெவளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர காத்திரமான பங்களிப்பினை செய்து வருகின்றார்.
அத்துடன் இந்த பிரேரனைக்கான சீனா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவினை திரட்டுவதில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக இருந்தபோதிலும் அதற்கு சர்வதேச தரத்தை கொண்ட பொறிமுறையொன்றை நிறுவுவதில் அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.