தற்போது உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தாக (Vaccine) ZMapp என்று பெயரிடப் பட்ட மருந்து ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குரங்குகளிடம் பரிசோதித்து இருப்பதாக தி இன்டிபென்டன்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஷ்மாப் (ZMapp) என்ற மருந்து சேஸ் மகாகுயஸ் இனத்தைச் சேர்ந்த 18 குரங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப் பட்ட போது அனைத்துக் குரங்குகளும் உயிர் பிழைத்தன.
ஆயினும் இந்த மருந்து செயற்படுவதில் மனிதர்கள் மற்றும் குரங்குகளுக்கு இடையே வித்தியாசம் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் இம்மருந்தின் தரத்தை மேம்படுத்தி மனிதர்களிடம் பரிசோதனை செய்த பின்னரே அதன் வெற்றி உறுதி செய்யப் படும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதேவேளை இம்மாதம் ஷ்மாப் மருந்து இரு அமெரிக்கர்களும் நைஜீரியா மற்றும் உகண்டாவைச் சேர்ந்த எபோலாவால் பாதிக்கப் பட்ட இரு டாக்டர்களிடம் முதலில் பரிசோதிக்கப் பட்ட போது அவர்களது உடல் நிலை சற்றுத் தேறியிருந்தது. ஆயினும் எபோலா தாக்கிய ஸ்பெயின் மதகுருவும் லைபீரிய டாக்டருமான ஆப்ரஹாம் பொர்பொர் என்பவருக்கு ஷ்மாப் மருந்து செலுத்தப் பட்ட போதும் அவர் பலனின்றி உயிரிழந்தார் என்பதும்ன் குறிப்பிடத்தக்கது.
உலக வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவல் நிகழும் இவ்வாண்டில் இந்நோய் தாக்கிய 90% வீதமானவர்கள் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இந்த நோய் தாக்கிய 3069 பேரில் 1552 பேரின் உயிரை இது பறித்துள்ளது என உலக சுகாதாரத் தாபனமாக WHO தெரிவித்துள்ளது. மேலும் உலகளாவிய ரீதியில் இது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் குறைந்தது 20 000 பேருக்குத் தொற்றக் கூடும் எனவும் WHO எச்சரித்துள்ளது.