நாட்டில் விரைவில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரி மைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் பௌத்த விஹாரையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு நியூயோர்க்கில் வசிக்கும் இலங்கையர்கள்வருகை தந்திருந்தனர். இதன்போது அமெரிக்க வாழ் இலங்கையர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமுகமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டுக்கு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான சர்வதேசத்திடம் இருந்து பாரிய ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார். கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தததிலிருந்து நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறபபட்டு வந்த நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த விடயத்தை உறுதிபடுத்தியுள்ளார்.
அண்மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.