பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னெடுத்து வருகின்றார் என அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்காக தினமும் நேரம் தவறாமல் தியாக மனப்பாங்குடன் அதான் (பாங்கு) சொல்வதுடன் பள்ளிவாசல்களின் பரிபாலன விடயங்களிலும் முன்னின்று உழைக்கின்ற முஅத்தின்மார்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும்.
சேவைக் காலத்தில் மிகக் குறைந்த கொடுப்பனவே வழங்கப்படுவதனால் வருமானம் குறைந்த நிலையில் வாழ்கின்ற இவர்களுக்கு ஓய்வுபெற்ற பின்னரான வாழ்க்கைச் செலவுக்கு கட்டாயம் மாதாந்த ஓய்வுதியக் கொடுப்பனவு ஒன்று வழங்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஹலீம் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்.
ஆகவே எதிர்வரும் காலங்களில் முஅத்தின்மார்களுக்கு ஓய்வுதியம் வழங்குவதற்கு அமைச்சர் மேற்கொண்டுள்ள வேலைத் திட்டம் வெற்றி அளிக்கும் என எதிர்பார்க்க முடியும்.
அதேவேளை இதுவரை வக்பு சபையினால் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள் அனைத்தையும் முறையாக பதிவு செய்வதற்கும் பள்ளிவாசல்களில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஹஜ், உம்ரா சேவைகளை சீராக ஒழுங்க்கமைப்பதற்கும் ஹஜ் கோட்டா குளறுபடிகளை நிவர்த்தி செய்வதற்கும் ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அதற்கான கட்டணங்களைக் குறைப்பதற்கும் மக்காவில் ஹாஜிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும் அமைச்சர் பல்வேறு வகையான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் இணைப்பாளர் அஸ்வான் குறிப்பிட்டார்.