ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர்,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால், நிர்வாக ரீதியான செயற்பாடுகள் மூலம் விலக்கப்படுவார்.
வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள், சட்டத்தரணிகளை கொண்ட, இலங்கையின் போர் காலம் பற்றி விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்படும் பொறிமுறைக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதி வசதிகளை பெற இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை விசாரணை பொறிமுறை கட்டமைப்பானது பலமிக்க சர்வதேச நாடுகளின் நிதியில் இயங்கும் நிறுவனமாக மாறும் என மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்த வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் வந்த சந்தர்ப்பத்தில், அவர்களை எம்பிலிப்பிட்டியவுக்கு அழைத்துச் சென்று மரவள்ளி கிழங்கை சாப்பிட கொடுத்து வேண்டுமொன்றே அவர்களை அவமானப்படுத்தியதால்,
மேற்குலக நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக யோசனை நிறைவேற்றுவதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அவ்வாறு அன்று இலங்கைக்கு வந்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் அமைச்சர்களுக்கு எந்த உணவு வழங்கப்பட்டது என்பது தனக்கு நினைவில் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கையை நிறுத்த தான் மறுத்ததாகவும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிப்பணியாத காரணத்தினாலேயே தற்போது பயங்கரவாதமற்ற நாட்டில் வாழ முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நான் லிபிய தலைவர் முஹம்மர் கடாபியின் தோளில் கைபோட்டுக் கொண்டதால், மேற்குலக நாடுகள் இலங்கையுடன் கோபித்து கொண்டதாக சிலர் கூறுகி்ன்றனர்.
எனினும் குறித்த புகைப்படத்தில் கடாபி எனது தோளில் கைபோட்டுக் கொண்டிருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதி சில மாதங்களில் உலக நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்து, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பும் வீழ்ச்சியடைந்து வந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடனுதவி கிடைப்பது தாமதமாகியது.
அந்த சந்தர்ப்பத்தில் நான் எடுத்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து கடாபி, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கி இணங்கினார்.
இந்த வாக்குறுதி கிடைத்திருக்காது போனால், போரில் வெற்றி பெறுவதற்கு முன்னர் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பிருந்தது எனவும் ராஜபக்ச தனது அறிக்கையில் கூறியுள்ளார்.