ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுக் காலை மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் மு.ப. 10.30 மணியளவில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.
குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும், சிறு வர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலான பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைளை ஏந்தியிருந்தனர்.மன்னார் நீதிமன்ற வீதியில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. குறித்த ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ:-
சிறுவர்களுக்கு பல்வேறு விதமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இவை தொடர்பில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். -என்று தெரிவித்தார்.குறித்த ஊர்வலத்தில் மன்னார் வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி குணசேகர, மாவட்ட வீதிப் போக்குவரத்து பொறுப்பதிகாரி சேனக்க,மன்னார் பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.