அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, தொடர்ந்து 2 முறை பதவி வகித்து
விட்டதால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது.
அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்க அமெரிக்காவின் 67-வது வெளியுறவு மந்திரி பதவி வகித்த 67 வயது ஹிலாரி கிளிண்டன் தீவிர முனைப்பில் உள்ளார். அவருக்கு பெரும் போட்டியை அளித்து வருபவர், வெர்மாண்ட் எம்.பி., பெர்னீ சாண்டர்ஸ் (74) ஆவார். கருத்துக்கணிப்புகள்,
இருவருக்கும் இடையே கடும் போட்டி உருவாகி வருவதை காட்டுகின்றன. கடந்த 29-ந் தேதி நடந்த கருத்துக்கணிப்பு, கட்சிக்குள் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், பெர்னீ சாண்டர்சுக்கு 28 சதவீத ஆதரவு இருப்பதையும் காட்டியது.
ஹிலாரி கிளிண்டனுக்கு சர்வதேச தீயணைப்பு படை வீரர்கள் சங்கம் ஆதரவு அளிக்க தீர்மானித்திருந்த நிலையில், 2 தினங்களுக்கு முன் தங்கள் முடிவை திடீரென கை விட்டனர்.வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலத்தில் தனிப்பட்ட இமெயில் கணக்கை, அரசுப்பணிகளுக்கு அவர் பயன்படுத்தியதும், அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் என்று கருதப்படுகிற தேசிய கல்வி சங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஹிலாரிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான ஓட்டெடுப்பில் 175 இயக்குனர்களை கொண்ட அந்த சங்கத்தில் 75 சதவீதத்துக்கும்
மேற்பட்டோர், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் லில்லி எஸ்கெல்சன் கார்சியா கருத்து தெரிவிக்கையில், “ஹிலாரி ஒரு வலுவான தலைவர். அவர் மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் என பல தரப்பினருக்காகவும் உழைப்பார். அமெரிக்காவின் பொருளாதார வலு, அமெரிக்க பப்ளிக் பள்ளிகளில் தான் தொடங்குகிறது என்பதை ஹிலாரி நன்கு உணர்ந்திருக்கிறார்” என புகழாரம் சூட்டினார்.
தேசிய கல்வி சங்கத்தின் ஆதரவு முடிவுக்கு ஹிலாரி நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “தேசிய கல்வி சங்கத்தின் ஆதரவு, எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம். ஜனாதிபதி என்ற நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நான் போராடுவேன்” என கூறினார்.
தேசிய கல்வி சங்கத்தின் ஆதரவு, ஹிலாரியின் கை ஓங்கி வருவதையே காட்டுவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.