தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை அன்றே மஹிந்த ராஜபக் ஷ வழங்கியிருந்தால் இன்று எமக்கு எதிரான அழுத்தங்கள் வந்திருக்காது. அன்று மஹிந்த செய்த தவறுக்கு இன்று அனைவரும் விளைவை அனுபவிக்கவேண்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். வடக்கில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். இனியும் காலம் கடத்துவது பிரச்சினைகளை வளர்க்கும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் நாட்டை பாதுகாக்கும் நல்லதொரு விடயமாக இருந்தாலும் யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ குற்றச்சாட்டுகள் நடந்திருக்குமானால் அது போர் தர்மத்துக்கு முரணான விடயமாகும். அதேபோல் இந்த நாட்டில் பொது மக்கள் அமைதியாக வாழவும் நாட்டின் சூழல் அமைதியாக இருக்கவுமே பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதே தவிர தனிப்பட்ட யாரையும் மகிழ்ச்சிப்படுத்தவல்ல. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரே அதிகளவான அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயவேண்டும் என்ற பலமான அழுத்தம் சர்வதேச தரப்பினால் முன்வைக்கப்பட்டது. இன்றும் அது தொடர்ந்து கொண்டு உள்ளது.
யுத்தம் முடிவடைந்த ஒரு நாட்டின் மீது இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது யதார்த்தமான ஒன்றாகும். இவ்வாறான செயற்பாடுகளைக் கையாள்வது இலங்கைக்கு மட்டுமல்ல. இதற்கு முன்னரும் பல நாடுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் இவ்வாறான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளன. அவற்றுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே இந்த விடயத்தில் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எனினும் இவ்வாறு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். எமது இராணுவத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது ஏதேனும் ஒரு வகையில் அரசாங்கம் அந்த குற்றச்சாட்டுகளை நிவர்த்திசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் குற்றங்கள் நடந்திருப்பின் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாது மறுப்பு தெரிவிப்பதனால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த தரப்பினர் இந்த செயற்பாட்டையே மேற்கொண்டனர். சர்வதேச தலையீடு வேண் டாம் என வலியுறுத்திய அதேவேளை உள்ளக பொறிமுறைகளை முன்னெடுக்காது பிரச்சினைகளை வளர்த்தனரே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கவில்லை.
அதேபோல் யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களின் நிலைமைகளை கவனத்தில் கொள்ளவும் இல்லை.
இன்றும் வடக்கு மக்களை பயங்கரவாதிகள் என்ற போர்வையிலேயே மஹிந்த தரப்பு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டில் நல்லதொரு அரசியல் தீர்வைபெறக் கூடிய வாய்ப்பும் நாட்டில் நல்லிணக்க முறைமையில் ஆட்சியை கொண்டுசெல்லவும் நல்லதொரு வாய்ப்பு இருந்தும் மஹிந்த தரப்பினர் அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டனர். மாறாக இனரீதியிலான அரசியல் நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மஹிந்த தரப்பு ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளிலும் யுத்த வெற்றி, புலிகளின் பயங்கரவாதம், புலம்பெயர் தமிழ் பயங்கரவாதிகள் தொடர்பில் மட்டுமே பேசி பிரசாரம் செய்தனரே தவிர நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழல் தொடர்பில் சிந்திக்கவில்லை. ஆகவே மஹிந்த தரப் பினரே நாட்டில் மிகப்பெரிய தவறை இழைத்தனர். அதற்கான விளைவுகளை இன்று நாம் அனுபவிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே இப் போது நாட்டில் சரியான வகையில் சட் டத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும்.
அதற்கான முயற்சிகளை அர சாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதே போல் வடக்கில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும். தொடர்ந்தும் சர்வதேச விசார ணைகள், ஆக்கிரமிப்புகள் என்ற கதைகளை கூறி காலத்தை கடத்துவது அர்த்தமற்ற செயற்பாடாகும் என்றார்.