Breaking
Tue. Dec 24th, 2024

இலங்கையின் தற்போதைய அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு ஜப்பான் அரசு உதவிக்கரம் நீட்டும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கையில் தேசிய ஒற்றுமை, மத, இன ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே புதிய அரசின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றோம். சமூக மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிதி திரட்டுவதற்கான மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கும் ஜப்பானின் ஆதரவை எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.

இலங்கையின் புதிய அரசு நாட்டின் நிலையான பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதன் வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதற்கும் ஜப்பானின் முதலீடுகள் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கின்றேன். எனது விஜயத்தின் மூலம் இரு நாட்டினதும் பூரண ஒத்துழைப்புக்களைப் பரிமாரிக் கொள்வதை எதிர்ப்பார்க்கின்றேன்.

அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உறவுகளையும் எதிர்காலத்தில் இந்த விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். தேசிய அரசானது தெற்காசியாவில் வேகமான பொருளாதார நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான முன்னெடுப்புக்களை செய்து வருகின்றது. இந்நிலையை அடைந்து கொள்ள ஜப்பானின் உதவி அத்தியவசியமானதாகும். இலங்கை மக்கள் ஜனவரியில் புதிய ஜனாதிபதியையும் ஓகஸ்டில் புதிய பிரதமர் ஒருவரையும் தெரிவு செய்துள்ளனர்.

ஜனநாயக ரீதியிலான நல்லாட்சி, சட்டத்துக்கு முன்னுரிமை, நீதிமன்ற சுதந்திரம் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கி அரசு செயற்படுகின்றது. கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக மனித உரிமைகள் யோசனைகள் மூலம் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே அரசினை இணைந்து நடத்துகின்றன. புதிய தேசத்தை உருவாக்குவதற்காகவே பகைமைகளை மறந்து இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன. புதிய அரசமைப்புத் திட்டத்தை உருவாக்கல், மனித உரிமைகளை உறுதிப்படுத்தல், நிறுவன அமைப்புக்களை மேலும் வலுப்படுத்தல் என்பன எமது அரசியல் கொள்கை ரீதியில் முதன்மை செயற்பாடுகளாகும். எனினும், தேசிய ஒற்றுமை, மத, இன ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.

கட்சிகளுடம் பேச்சுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். மொழி மற்றும் இனப் பிரச்சினையானது கடந்த ஐந்து தசாப்தங்களாக மிகப் பிரதான பிரச்சினையாக இருந்ததுடன் கடந்த காலங்களில் மத ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்பட்டன. தேசிய நல்லிணக்கம் மற்றும் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக ஜப்பான் அரசின் உதவியை நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம். விசேடமாக பிரச்சினைகள் நிலவிய பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக நிதி திரட்டு மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஜப்பானின் ஆதரவை நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.

By

Related Post