Breaking
Tue. Dec 24th, 2024
Abusheik Muhammed
சொந்த மண்ணை காக்க திட உறுதி மற்றும் வீரியத்துடன் நடக்கும் போராட்டத்தை எந்தவொரு ஆயுதம் மூலம் அழிக்க முடியாது என்ற உண்மை, 51 நாட்களாக நீண்ட காஸா மீதான இஸ்ரேலின் போர் உலகுக்கு உணர்த்தியுள்ளது.
ஆபரேசன் ப்ரொடக்டிவ் எட்ஜ் (operation protective edge) என்ற பெயரில் இஸ்ரேல் போரைத் துவக்கியது. ஹமாஸை ஒழிப்பதே தங்களது போரின் லட்சியம் என்று அறிவித்த இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைமை பின்னர் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை நிறுத்தவேண்டும், ஹமாஸின் சுரங்கங்களை அழிக்கவேண்டும் ஆகிய 2 லட்சியங்களோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டது.
51 தினங்களில் 2145 ஃபலஸ்தீன் காஸா மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். இதில் 578 குழந்தைகளும், 261 பெண்களும், 102 வயோதிகர்களும் அடங்குவர். 15,670 வீடுகள் தகர்க்கப்பட்டன. இதில் 2267 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 190 மஸ்ஜிதுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 70 மஸ்ஜிதுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
மேலும் காஸாவில் உள்ள ஒரேயொரு விலங்குகள் சாலை, பைத் ஹானூனில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிலையம் மீது குண்டுவீசி விலங்குகளையும், மாற்றுத் திறனாளிகளையும் இஸ்ரேல் படுகொலைச் செய்தது. ஐந்து லட்சம் காஸா மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவைதான் 51 தினங்களாக நடந்த போரில் இஸ்ரேல் சாதித்தவை.
மனிதர்களை படுகொலைச் செய்து பள்ளிக்கூடங்களையும், வீடுகளையும், மஸ்ஜிதுகளையும் தகர்த்துவிட்டு இஸ்ரேல் அரசியல் மற்றும் ராணுவரீதியாக என்ன சாதித்தது? என்ற கேள்விக்கு இஸ்ரேலிடம் இப்போது பதில் இல்லை. இஸ்ரேலுக்கு உள்ளேயும் இக்கேள்வி வலுப்பெற்று வருகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மறுபுறம், அதாவது ஃபலஸ்தீனின் பக்கமிருந்து கவனிக்கவேண்டிய பல விசயங்கள் உள்ளன. ஹமாஸின் பதிலடித் தாக்குதல்களில் 69 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 64 பேரும் ராணுவத்தினர். ஆனால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 160 என்று ஹமாஸ் கூறுகிறது.
எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும், சொந்த பூமியை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்களாக இருந்த போதிலும் அங்குள்ள சாதாரண மக்களை கொல்லாமல் பெரும்பாலும் ராணுவத்தினரையே ஹமாஸ் குறிவைத்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகத்தின் முன்னணி ராணுவத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்ரேலால் முடியாதது, ஒரு கொரில்லா தாக்குதல் முறையைக் கொண்ட ராணுவப் பிரிவால் முடிந்துள்ளது ராணுவ ரீதியாக ஹமாஸிற்கு வெற்றியாகும்.
அரசியல் ரீதியாகவும் ஹமாஸிற்கு இந்தப் போர் வெற்றியை அளித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழ காஸா போர் உதவியது. அதேவேளையில், ஃபலஸ்தீனில் ஹமாஸிற்கான ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
ஃபலஸ்தீனின் ஐக்கியமும், ஐக்கிய அரசும் கூடுதலாக பிரபலமடைய உதவியது. தங்களால் தீவிரவாத இயக்கம் என்று பரப்புரைச் செய்யப்பட்ட ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்பந்தம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டதன் மூலம் வெளிப்படையாக ஹமாஸிற்கு சட்ட அந்தஸ்து கிடைக்க காரணமானது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆசி கிடைப்பதற்காக கடந்த ஆண்டு எகிப்தும் ஹமாஸை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தடை விதித்திருந்தது. ஆனால், அதே ஹமாஸை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக அழைத்தது எகிப்திய அரசு.
தங்களால் தடைச் செய்யப்பட்ட இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் உருவானது எகிப்திற்கு அவமானம் என்றால், ஹமாஸுக்கு இது ராஜதந்திர வெற்றியாகும்.
இறுதியில் நீண்டகால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ஹமாஸ் நீண்டகாலமாக எழுப்பிவரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஸாவின் மீது ஏற்படுத்தியுள்ள தடையை நீக்கவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். காஸாவிற்குள் சரக்குகள் மற்றும் கட்டிட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்காக எல்லைகள் திறக்கப்படும். ஃபலஸ்தீன் ஆணையம், ஐ.நா மற்றும் இஸ்ரேலின் கண்காணிப்பில் இந்த எல்லைகள் இயங்கும்.
காஸாவின் மீன் பிடிப்பதற்கான எல்லை மூன்று நாட்டிக்கல் மைல், ஆறு நாட்டிக்கல் மைலாக நீட்டிக்கப்படும்.
காஸா எல்லையில் செல்ல தடைச் செய்யப்பட்ட பகுதியின் தொலைவு 300 மீட்டரில் இருந்து 100 மீட்டராக சுருக்கப்படும்.
காஸாவை புனரமைக்க சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
காஸாவில் துறைமுகம் மற்றும் விமானநிலையம் புனரமைக்கப்பட்டு இயங்கவேண்டும் என்பது ஹமாஸின் கோரிக்கையாகும். ஆனால், இதுக்குறித்து ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை.
போர் நிறுத்தம் நீடிக்கும் வேளையில் இத்தகைய காரியங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், துறைமுகம் மற்றும் விமானநிலையத்தை புனரமைப்பது காஸாவை புனரமைப்பதில் அடங்கும் என்றும் அதனை தாங்கள் புனரமைப்போம் என்றும் ஹமாஸ் அறிவித்துள்ளது.
‘எங்களுடைய விமானநிலையத்தை தாக்கினால், நாங்களும் உங்களது விமானநிலையத்தை தாக்குவோம்.’ என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் மனிதநேய ஆர்வலர்களையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஃபலஸ்தீன் காஸா மீதான போர் நீடித்தது. டன் கணக்கில் குண்டுகளை வீசி அப்பாவி மக்கள் பலியாகும் நிமிடங்களின் இடைவெளியாகும் செய்திகளால் நமது உள்ளங்களெல்லாம் துவண்டுபோனது. ஆனால், இஸ்ரேலின் கொடூர தாண்டவங்களுக்கு இடையிலும் திட உறுதியுடனும், துணிச்சலுடனும் ஹமாஸ் போரிட்டது. அவர்கள் எவ்வாறு இஸ்ரேலின் தாக்குதலை தாக்குப்பிடிப்பார்கள்? என்ற கவலை பலரிடமும் எழுந்தது.
அதேவேளையில் உலகம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவில் பெரும்பாலான மக்கள், இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களிலிருந்து ஃபலஸ்தீன் காஸா மக்களை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தை நடத்தியது மட்டுமின்றி, ஹமாஸிற்கு வெற்றியை அளிக்கவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இறுதியில் சொந்த நாட்டை பாதுக்காக்கும் விசயத்தில், எந்த சக்திக்கும் அடிபணியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள் காஸா வாசிகள். திட உறுதி மற்றும் போராட்ட வீரியத்தை எந்தவொரு ஆயுதம் மூலம் அழிக்க முடியாது என்ற உண்மை மீண்டும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
Source- New India.TV
Press- Syed Ali

Related Post