“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்போது அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் சிறுமியை தூக்கிக்கொண்டு ஒருவாறு அதே ஜன்னலினாலேயே வெளியே வந்தேன்.
நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்டதெனியாவ – கடல்கம, அக்கரங்கஹ பிரதேசத்தின் சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான கொண்டயா எனப்படும் துனேஷ் பிரிய சாந்தவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் ஒரு பகுதியே அது.
இந்நிலையில் முழு நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்து, உணர்வுகளை தட்டியெழுப்பி மரண தண்டனையை உடன் அமுல் செய் என அழுத்தத்தை பிரயோகிக்கும் அளவுக்கு இட்டுச் சென்ற முன்பள்ளி மாணவி சேயா செதவ்மியின் படுகொலை விசாரணைகளில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அதிகாலை வேளை சேயா காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடு கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதியின் கொட்டதெனியாவ பொலிஸாருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே சேயா பாலியல் ரீதியாக வன்புணரப்பட்டு கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மறுநாள் (செப்டெம்பர் 13ஆம் திகதி) வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இருந்த ஒடையின் அருகே காட்டுப் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டாள்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகள், மேல் மாகாணத்துக் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மேல் மாகாணம் – வடக்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலி ஸ்மா அதிபர் எல்.ஜி.குலரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதித்த குமாரவின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
பல பொலிஸ் குழுக்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி இது தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில், பிரதான பொலிஸ் பிரிசோதகர் ரவீந்திர விமலசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் தொடரில் 18 வயதான மாணவனும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரும் ஆரம்பத்தில் கொட்டதெனியாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, டீ.என்.ஏ.சோதனையின் பின்னர் அவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் கடந்த 23ஆம் திகதி கம்பஹா – பெம்முல்ல பிரதேசத்தில் வைத்து பிரதான சந்தேக நபரான ‘கொண்டயா’ என்ற துனேஷ் பிரியசாந்தவை (வயது 32) புலனாய்வுப் பிரிவு கைது செய்து சேயா விவகாரம் தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டது.
குறித்த வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக மேலும் பல வாக்குமூலங்களை புலனாய்வுப் பிரிவினர் கொண்டயாவிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பர வேறுபாட்டை காட்டவே புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளை விரிவுபடுத்தினர்.
ஏற்கனவே, கொண்டயாவை கைது செய்ய முன்னர் புலனாய்வுப் பிரிவு அவரது சகோதரரான சமன் ஜயலத்தை பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ததிலேயே கொண்டயாவை கைது செய்ய முடிந்தது. ஏனெனில் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் சமன், கொண்டயா தொடர்பில் கிடைக்கப்பெற்ற கடந்த கால தகவல்களே அதற்கு காரணமாக அமைந்தன.
அதன்போதே சேயாவை கொண்டயாவே கொலை செய்ததாகவும், அதனை தன்னிடம் கூறி அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் சமன் ஜயலத் புலனாய்வுப் பிரிவுக்கு குறிப்பிட்டிருந்ததுடன், கொண்டயாவுக்கு எதிராக சாட்சி சொல்லவும் முன்வந்திருந்தார்.
எனினும் கொண்டயாவின் கைதின் பின்னர், அவர் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றில், தனது அண்ணன் சமனே இக் கொடூரத்தை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து புலனாய்வுப் பிரிவினரால் சமன் ஜயலத் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டு அவரது செயற்பாடுகளில் ஏற்பட்ட சந்தேகங்களை வைத்தே கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் வைத்து அவரை கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து 72 மணிநேரம் அவரை தடுத்துவைத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ததில் சேயா படுகொலை பொறுப்பை சமன் ஜயலத் ஏற்றுக் கொண்டுள்ளார். 36 வயதான ஜயலத், கொட்டதெனியாவ பிரதேசத்தில் கொண்டயாவுடன் தற்காலிகமாக தங்கியிருந்த சமயமே இதனை புரிந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் தகவல்களில் அடிப்படையில் அந்த வாக்கு மூலத்தை சுருக்கமாக நாம் தருகிறோம்.
“நான் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் உறங்குவதை பார்த்து ரசிக்கும் பழக்கவழக்கம் கொண்டவன். அன்று நான் அந்த பிள்ளையின் வீட்டுக்கு போனேன். போகும் போது அந்த சிறுமியின் அம்மா டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் இருக்கவில்லை. வீட்டில் யாரும் இருப்பர் என அஞ்சினேன். பிள்ளைகளும் அப்போது இருந்தனர். பின்னர் இரவு வெகு நேரம் நான் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.
மீண்டும் அந்த வீட்டுக்கருகில் வந்தேன். அப்போது அறையின் மின் குமிழ்கள் எரிந்து கொண்டிருந்தன. ஜன்னல் பக்கம் போனேன் ஜன்னல் கதவை திறக்க முற்பட்ட போது அது திறந்தே இருந்தது. அந்த ஜன்னல் ஊடாக அறைக்குள் நுழைந்தேன். ஜன்னலில் இருந்து கட்டிலில் கால்வைத்தே உள் நுழைந்தேன். அப்போது அனைவரும் நித்திரையில் இருந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே கத்தியொன்றை தேடினேன். அது எனக்கு கிடைக்கவில்லை. கத்தியில்லாமல் ஒரு பெண் அருகே சென்று, அவள் கூச்சலிட்டு ஊரை கூட்டினால் சிக்கிக் கொள்வோம் என பயம் வந்தது.
அப்போது எண்ணத்தை மாற்றினேன். அந்த சிறுமியைக் கொண்டு செல்ல தீர்மானித்தேன். அப்படியே தூக்கிச்சென்றேன். இதனைவிட இந்த கொடூரத்தின் பொறுப்பை ஏற்க தான் கொண்டயாவை வற்புறுத்தியதாகவும் அதன்படியே அவர் இதனை ஏற்றதாகவும் சமன் ஜயலத் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் சமன் ஜயலத் இக் கொடூரம் குறித்து மினுவாங்கொடை நீதிவானுக்கு நேற்று முன்தினம் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ள நிலையில், டீ.என்.ஏ. சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டார்.
அதன் பிரகாரம் டீ.என்.ஏ. முடிவு கிடைத்ததும் சேயாவை கொன்றது கொண்டயாவா அல்லது அவன் சகோதரனா என்பது தெளிவாகி விடும். அதுவரை இருவரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வெவ்வேறு கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.